தமிழ்நாடு

tamil nadu

கார்கில் வெற்றி தினம்: கார்கில் போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங், முப்படைத்தளபதிகள் மரியாதை!

By

Published : Jul 26, 2023, 11:11 AM IST

24ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தையொட்டி லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் தளபதிகள் மரியாதை செலுத்தினர்.

Lamochen
ராணுவம்

லடாக்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். கார்கில் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், 24வது கார்கில் வெற்றி தினம் இன்று (ஜூலை 26) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கார்கில் வெற்றி தினம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "கார்கில் வெற்றி தினம், இந்தியாவின் துணிச்சலான ராணுவ வீரர்களின் வீரம் நிறைந்த கதையை எடுத்துக் கூறுகிறது. அவர்கள் எப்போதும் மக்களுக்கு உத்வேகம் அளிப்பார்கள். இந்த நாளில், அவர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் வெற்றி தினத்தையொட்டி, லடாக்கின் திராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதேபோல், ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டேவும், கார்கில் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து கடற்படைத் தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர், ஏராளமான ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களும் கார்கில் போரில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும், கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நான்கு MIG 29 போர் விமானங்கள் கார்கில் நினைவிடத்திற்கு மேல் பறக்க வைக்கப்பட்டன. அதேபோல், மூன்று ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் கார்கில் போர் நினைவிடத்தின் மீது மலர் தூவப்பட்டது.

முன்னதாக நேற்று(ஜூலை 25) கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவம் சார்பில் கார்கில் போர் தொடர்பாக வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதில், கார்கில் போரின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், போரின் காட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

போரில் மறைந்த ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அந்த காட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திராசில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் உரையாடினார்.

இதையும் படிங்க: Manipur violence: "எங்கு செல்வது எனத் தெரியவில்லை": கதறும் மணிப்பூர் கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details