தமிழ்நாடு

tamil nadu

"நாட்டிற்காக பணியாற்றுபவர்களை ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?" - அதிகாரிகளை கண்டித்த வேலூர் ஆட்சியர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 6:01 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (பிப்.12) நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி வந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அளித்தனர்.

அப்போது வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கம்மவான் பேட்டையை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், தான் ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், வீட்டில் தாய் மட்டும் தனியாக உள்ள நிலையில் தங்கள் வீட்டின் அருகாமையில் இடப்பிரச்சனை உள்ளதாகவும், அதற்கு தீர்வு காணும் படி வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், "நான் பதவியேற்ற இரண்டாவது நாளே இவர் என்னிடம் மனு அளித்தார். அதை துறை சார்ந்த அதிகாரிகளிடம் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டிற்காக சேவை செய்யும் இது போன்று ராணுவ வீரர்களின் மனுக்களை உடனடியாக என்னவென்று விசாரித்து தீர்வு காண வேண்டும். அது தான் அதிகாரிகளின் கடமை.

நாட்டிற்காக உழைப்பவர்களை அலைக்கழிக்கக் கூடாது. இன்று மாலைக்குள் இதன் அறிக்கையை எனக்கு சமர்ப்பிக்க வேண்டும்" என கடிந்து கொண்டார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. நாட்டிற்காக உழைப்பவர்களை அலைக்கழிக்கக் கூடாது. உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் செயல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details