தமிழ்நாடு

tamil nadu

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நெல்லையில் ராமர் கோயிலில் சிறப்புப் பூஜைகள்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 7:45 PM IST

திருநெல்வேலி: ராமஜென்ம பூமியான அயோத்தியில் ஸ்ரீராம் லல்லா எனும் பால ராமர் கோவில் பிரதிஷ்டை இன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியுடன், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சிலை பிரதிஷ்டை பூஜையில் பங்கேற்றனர். 

அதேபோல் பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என நாட்டின் முக்கிய பிரபலங்கள் சுமார், 7000 பேர் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.  இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களில் ஒன்றான அருகன்குளம் காட்டு ராமர் திருக்கோயிலில் அதிகாலை முதல் சிறப்புப் பூஜைகள் நடந்து வருகிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக பத்திரிகை மற்றும் கோயில் புகைப்படத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. 

தொடர்ந்து கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, சீதா பிராட்டி சமேத ஸ்ரீ ராமபிரான் லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details