தமிழ்நாடு

tamil nadu

ஓசூர் அருகே கோட்டை மாரியம்மனுக்கு பூஜை பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 11:07 AM IST

கோட்டை மாரியம்மனுக்கு பூஜை பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், அந்தப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களுள் ஒன்று. தற்போது இந்த கோயில் புனரமைக்கப்பட்டு, நாளை (பிப்.19) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை (பிப்.17) முதல் சிறப்பு பூஜைகள், அம்மனுக்கு சிறப்பாக அபிஷேகங்கள் ஆகியவை செய்யப்பட்டன.

இதனிடையே, பாகலூர் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, கோட்டை அம்மனுக்கு அலங்காரப் பொருட்கள், வாசனை மலர்கள், பழங்கள் மற்றும் நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை ஊர்வலமாக கொண்டு வந்து உள்ளனர். அப்போது, அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் கொண்டு வந்த பூஜைப் பொருட்களை அம்மன் சன்னதியில் வைத்து, அதன் பிறகு கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர். இவ்வாறு மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், ஓசூர் அருகே நடந்த இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details