தமிழ்நாடு

tamil nadu

நஞ்சப்பா சத்திரம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்.. பண்ணை பணியாளர்கள் பீதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 7:57 AM IST

நஞ்சப்பா சத்திரம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

நீலகிரி: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதாலும், ஆறு மற்றும் குளங்கள் வறண்டு வருவதாலும், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரைத் தேடி மலையடிவாரத்தை நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில் மரப்பாலம், குறும்பாடி உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள், தற்போது குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பா சத்திரம் பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனால், பண்ணை பணியாளர்கள் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனவர் ராஜ்குமார், வனக் காப்பாளர்கள் திலீப், ராம்குமார், வனக்காவலர் ஏசுராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் 20-க்கும் மேற்பட்டோர், காட்டு யானைகள் நகரப் பகுதிகளுக்கு வராமல் தடுப்பதற்காக இரண்டு குழுக்களாகப் பிரிந்து, யானைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான முழு முயற்சியினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொழுது கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் யானை கூட்டத்தைக் கண்டவுடன் அருகே சென்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் யானைகள் நடமாட்டம் தெரிந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details