தமிழ்நாடு

tamil nadu

சிறுவாணி மலைப்பகுதிக்குள் துள்ளிக்குதித்து மான்கள்.. விடுவித்த வனத்துறை! - DEERS RELEASED IN SIRUVANI HILL

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 7:07 PM IST

சிறுவாணி மலை பகுதியில் விடுவிக்கப்பட்ட மான்கள் (Video Credit to ETV Bharat)

கோயம்புத்தூர்: கோவை நகரின் மையப் பகுதியில், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம்பிள்ளை நினைவைப் போற்றும் வகையில், கடந்த 1965ம் ஆண்டு வ.உ.சி உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு வகையான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த பூங்காவில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற காரணத்தினால் 530க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வண்டலூர் பூங்காவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. வ.உ.சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் அதனை நிராகரித்த மத்திய உயிரியல் ஆணையம், பூங்காவில் இருந்த விலங்கினங்கள் இட மாற்றம் செய்தது.

பெலிகான் பறவைகள்,பாம்புகள், முதலை மற்றும் மான்கள் மட்டுமே பூங்காவில் இருந்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இங்கிருந்த பாம்புகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விடப்பட்டன. தொடர்ந்து இங்குள்ள புள்ளி மான்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளி மான்களின் புழுக்கைகளை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு புள்ளி மான்களுக்குக் காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது.

தொடர்ந்து மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இன்று 26 புள்ளி மான்கள் வாகனம் மூலம் சிறுவாணி அடிவார கொண்டு செல்லப்பட்டு கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. 

அவை வாகனத்திலிருந்து துள்ளிக்குதித்த அடர்ந்து வனப்பகுதிக்குள் பாய்ந்து சென்றன. புள்ளி மான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details