தமிழ்நாடு

tamil nadu

கியூஆர் கோடு ஸ்கேன் செய்வது போல நாடகம்..ரூ.1,500 மோசடி செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 9:50 AM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, கியூ ஆர் குறியீடு (QR code) ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது போன்று, நூதன முறையில் ரூ.1,500 ஏமாற்றிச் சென்ற இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் வடமதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர், தேன்மொழி. வடமதுரை பேரூராட்சியின் திமுக 4-வது வார்டு கவுன்சிலராக உள்ள இவர் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று (பிப்.24) இவரது ஹோட்டலுக்கு இரண்டு இளைஞர்கள் சாப்பிட வந்தனர். அப்போது, ஹோட்டல் உரிமையாளர் தேன்மொழியிடம், நாங்கள் ஆயிரம் ரூபாய் உங்களது வங்கி கணக்கில் செலுத்துகிறோம்; கையில் பணமாக தாருங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு தேன்மொழி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, இருவரும் மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி என்று ரூ.500 சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்தப் பின்னர், QR கோடு ஸ்கேன் செய்து, ரூ. 1,500 செலுத்திய குறுஞ்செய்தியை தேன்மொழியிடம் காட்டியுள்ளார். அப்போது, மற்றொருவரிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்த தேன்மொழி, இளைஞர்கள் காட்டிய குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டு, சாப்பிட்டதற்கான பணம் ரூ.500 போக மீதி ரூ.1000 அவர்களிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, பணத்தைப் பெற்றுக் கொண்ட இளைஞர்கள் அங்கிருந்து சென்றனர்.

சிறிது நேரம் கழித்து தேன்மொழி தனது வங்கி கணக்கைப் பார்த்தபோது அதில், ரூ.1,500 வரவாகாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த நிலையில், இளைஞர்கள் QR கோடு ஸ்கேன் செய்வது போன்று நடித்து, வேறு ஒருவருக்கு ரூ.1,500 செலுத்திவிட்டு, அதற்கான குறுஞ்செய்தியை காட்டி ரூ.1,500 ஏமாற்றி சென்றது தெரியவந்தது. தற்போது, இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details