தமிழ்நாடு

tamil nadu

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு; கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 11:59 AM IST

கோயம்புத்தூர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சிகளின் சார்பில், கருப்புக் கொடி ஏந்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு மாநில விவசாயிகள், "டெல்லி சலோ" என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதிதமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், கையில் கருப்பு கொடி ஏந்தி, கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்பொழுது, போலீசார் அவர்களைத் தடுத்ததால், சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் நடந்து கொள்கிறது. கோயில் கட்டுவதற்கு பல ஆயிரம் கோடி செலவு செய்யும் மத்திய  அரசு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி சார்பில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றோம்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details