தமிழ்நாடு

tamil nadu

ஆசையாக அழைத்து அல்வா கொடுக்க முயன்ற பெண்.. நெல்லையில் தொழிலதிபர் கடத்தலின் பின்னணி என்ன? - woman kidnapped businessman

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 8:10 PM IST

Woman kidnapped businessman: சமூக வலைத்தளம் மூலம் ஆசை வார்த்தைகளைக் கூறி சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபரான நித்தியானத்தை பெண் கடத்திய நிலையில், புகார் அளித்த 30 நிமிடத்தில் கடத்தல்காரர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

woman-kidnapped-businessman-with-words-of-desire-police-caught-criminal-in-thirty-minutes
ஆசை வார்த்தைக் கூறி தொழிலதிபரைக் கடத்திய பெண்; 30 நிமிடத்தில் குற்றவாளியைப் பிடித்த போலீசார்! நெல்லையில் நடந்தது என்ன?

திருநெல்வேலி: சேலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ நேற்று (ஏப்ரல் 30) தொடர்பு கொண்டு, தனது நண்பரான நித்தியானந்தத்தை திருநெல்வேலியைச் சேர்ந்த கும்பல் ஒன்று கடத்தி வைத்திருப்பதாகவும், அவரிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதாக புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காவலர்கள் இத்தகவலை உடனடியாக திருநெல்வேலி மாநகர காவல்துறைக்கு தெரிவித்தனர். உடனடியாக மாநகர காவல் ஆணையர் மூர்த்தி உத்தரவின் பேரில், உதவி ஆணையர் ஆதர்ஷ் பசாரே, உதவி ஆய்வாளர் அருணாச்சலம் தலைமையிலான காவல்துறை நித்தியானந்தத்தின் தொலைபேசி நம்பரைஎண்ணை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.

திருநெல்வேலி அருகே பொன்னாக்குடியில் பெண் உட்பட ஐந்து பேர் சேர்ந்து நித்தியானந்தத்தை கடத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, காவல்துறை அந்த கும்பலிடம் இருந்து நித்தியானந்தத்தை மீட்டனர். மேலும், கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது, திருநெல்வேலி என்ஜிஓ காலனியைச் சேர்ந்த பானுமதி (40) என்ற பெண், முகநூல் மூலம் நித்தியானந்தத்திடம் பழகி வந்துள்ளார். தொழிலதிபரான நித்தியானந்தத்திடம், பானுமதி ஆசை வார்த்தை கூறி திருநெல்வேலிக்கு வரும்படி அழைத்துள்ளார். பானுமதியின் பேச்சை நம்பி திருநெல்வேலிக்கு வந்த நித்தியானந்தம், பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து பானுமதியை தனியாகச் சந்தித்துள்ளார்.

அப்போது, அங்கு திடீரென வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் நித்தியானந்தத்தைக் கடத்தியுள்ளனர். பானுமதி மற்றும் கூட்டாளிகளான தூத்துக்குடியைச் சேர்ந்த வெள்ளத்துரை, பார்த்தசாரதி, ரஞ்சித், சுடலை என ஐந்து பேரும் சேர்ந்து கத்தி முனையில் நித்தியானந்தம் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளைப் பறித்ததோடு, ஏடிஎம் கார்டில் இருந்து 60,000 மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறையில் 75,000 என 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துள்ளனர்.

தொடர்ந்து, காசோலையில் கையெழுத்து வாங்கி 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தரும்படி வங்கி ஒன்றிற்கு நித்தியானந்தத்தை அந்த கும்பல் அழைத்துச் சென்றுள்ளது. பணம் தரவில்லை என்றால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக காவல்துறையிடம் புகார் அளித்து விடுவேன் என்று பானுமதி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்ற பயத்தில், நித்தியானந்தம் அவர்கள் கேட்ட அனைத்திற்கும் ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர், வங்கிக்கு அழைத்துச் செல்லும் போது தான் நித்தியானந்தம் தனது நண்பரைத் தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து தெரிவித்துள்ளார். அதன் பிறகே நித்தியானந்தத்தின் நண்பர் தகவலைத் தெரிவித்த உடன், சம்பவத்தின் வீரியத்தைப் புரிந்து கொண்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும், புகார் அளிக்கப்பட்ட 30 நிமிடத்திற்குள் பானுமதி மற்றும் அந்த கும்பலை காவல் துறையினர் சுற்றி வளைத்து நித்தியானந்தத்தை மீட்டுள்ளனர். தொடர்ந்து, அக்கும்பலிடம் நடத்திய விசாரணையில், பானுமதி இது போன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலம் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு நபர்களை ஏமாற்றி பல லட்சம் பணத்தைப் பறித்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் அதிரடியாகச் செயல்பட்டு 30 நிமிடங்களுக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து தொழிலதிபரை மீட்ட காவல்துறையை மாநகர காவல் ஆணையர் மூர்த்தி நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இதையும் படிங்க:ஆம்பூரில் முதியவர் கொலை; வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! - Old Man Murder In Tirupathur

ABOUT THE AUTHOR

...view details