தமிழ்நாடு

tamil nadu

கன்னியாகுமரி அருகே கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பெண் பலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 7:29 AM IST

Woman Died in Kanyakumari: கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைகுளம் அருகே இயங்கி வரும் கிரஷரில் வேலை பார்த்து வந்த அய்னா என்ற பெண் பணியின் போது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்தார்.

Woman Died in crusher factory Accident in Kanyakumari
கன்னியாகுமரி அருகே கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பெண் பலி

கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரை குளம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன்(64). இவரது மனைவி அய்னா(56). இவர்களுக்கு இரண்டு மகன்களும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

அய்னா அவரது வீட்டின் அருகே செயல்பட்டு வரும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் என்பவருக்குச் சொந்தமான ஜல்லிக்கற்கள் உடைக்கும் கிரஷர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் அய்னா நேற்று (மார்ச் 1) வழக்கம்போல் காலையில் வேலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது கன்வேயர் பெல்ட்டில் அய்னா சிக்கி படுகாயம் அடைந்து மூச்சுப் பேச்சின்றி மயக்க நிலையில், உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த அய்னாவின் கணவர் நாகேந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று மனைவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அய்னாவின் கணவர் நாகேந்திரன் இது குறித்து தென் தாமரை குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் தனது மனைவி அய்னா வேலை செய்து கொண்டிருந்த கிரஷரில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றும் அதன் உரிமையாளர் அஜாக்கிரதையாக இருந்ததாகவும்; அதனால் தான், தன் மனைவி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.

எனவே, கிரஷர் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட தென் தாமரை குளம் போலீசார் புகாரின் பேரில் அந்த சம்பந்தப்பட்ட கிரஷருக்கு போலீசார் பூட்டுப் போட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் வேலையின்போது, கன்வேயர் பெல்ட்டில் சேலை சிக்கி இழுத்ததால் எந்திரத்தில் மாட்டிக்கொண்டு அய்னா படுகாயமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டிய அய்னாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது கன்னியாகுமரி காவல்துறை டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் அங்கு வந்த அதிரடிப்படை போலீசார் அங்கு நின்ற மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து உறவினர்கள் உடலைப் பெற்றுக் கொள்ளச் சம்மதித்துக் கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:"பெங்களூரு குண்டுவெடிப்பை அரசியலாக்க வேண்டாம்" - கர்நாடக முதல்வர் சித்தராமையா!

ABOUT THE AUTHOR

...view details