தமிழ்நாடு

tamil nadu

“பொன்முடி நிரபராதி என தீர்ப்பளிக்கவில்லை” - பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 9:04 PM IST

Updated : Mar 17, 2024, 9:54 PM IST

RN Ravi Vs MK Stalin: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்வது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக அமையும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால் முன்னாள் அமைச்சர் பொன்முடி பதவி இழந்தார். இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் மேல்முறையீட்டில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார் என சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது. அதேநேரம், பொன்முடி அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்ச் 13 அன்று கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம்.

ஆனால், அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கவில்லை. சார்ஜஸ் அப்படியே இருக்கிறது. ஆகவே, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது. மேலும், இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பிய மறுநாள் 3 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில், நேற்றைய தினம் மக்களவைத் தேர்தல் தேதியுடன், தமிழ்நாட்டில் காலியாகவுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதில், சமீபத்தில் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதாரணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி ஒன்றில், பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் என குறிப்பிடப்பட்டு இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

பின்னர், அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தவறுதலாக வந்துவிட்டதாகவும், பொன்முடி தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். ஏனென்றால், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

Last Updated :Mar 17, 2024, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details