தமிழ்நாடு

tamil nadu

இரண்டு கைகள் இல்லாமல் வாகனத்தை இயக்கும் பெண்! சாதிக்க ஊனம் தடையில்லை என நிரூபணம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 10:51 PM IST

Villupuram woman: உடல் நலம் நன்றாக இருந்தும் கூட சில நேரம் பலர் சோம்பேறிகளாகவே இருந்து விடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இரண்டு கைகள் இல்லாமல் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருபவர் தான் வித்யா ஸ்ரீ.

இரண்டு கைகள் இல்லாமல் வாகனத்தை இயக்கும் விழுப்புரம் பெண்
இரண்டு கைகள் இல்லாமல் வாகனத்தை இயக்கும் விழுப்புரம் பெண்

இரண்டு கைகள் இல்லாமல் வாகனத்தை இயக்கும் விழுப்புரம் பெண்

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை-பழனியம்மாள் தம்பதியினருக்கு மொத்தம் 5 பெண் குழந்தைகள். இதில் வித்யஸ்ரீ தான் மூத்தவர். 30 வயதாகும் வித்யாஸ்ரீ முதுகலை ஆங்கிலம் படித்துள்ளார். மேலும் ஆசிரியர் ஆக வேண்டும் என்பதற்காக பி.எட் முடித்துள்ளார்.

பிறக்கும் போதே இரண்டு கைகளையும் இல்லாமல் பிறந்த வித்யாஸ்ரீயை அவரது பெற்றோர்கள் சரியாக கவனிக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், பாட்டி வீரம்மாள் வளர்ப்பில் வளர்ந்துள்ளார். வித்யாஸ்ரீக்கு ஐந்து வயது இருக்கும் போது பாட்டி வீரம்மாள் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கச் சென்றுள்ளார். இரண்டு கைகளும் இல்லை என்று தெரிந்தவுடன் பள்ளிக்கூடத்தில் வித்தியாஸ்ரீயை சேர்ப்பதற்கு தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது

ஆனால் பிள்ளையை சேர்க்காமல் இங்கு இருந்து போகவே மாட்டேன் என்று உறுதியாக இருந்துள்ளார் வீரம்மாள். “கைகள் இல்லாமல் எப்படி எழுதுவார்? புத்தகத்தைப் பிரித்து எப்படி படிப்பார்? என்று கேள்வி கேட்ட தலைமையாசிரியருக்கு, பதிலடி கொடுத்த பாட்டி, “என் பேத்திக்கு கைகளாக நான் இருக்கிறேன்…” என்று உறுதியாக இருந்து வித்யாஸ்ரீயை பள்ளியில் சேர்த்துள்ளார் பாட்டி வீரம்மாள். அப்போது சதீஷ்குமார் என்கிற ஒரு ஆசிரியர் வித்தியாஸ்ரீயை பள்ளியில் சேர்ப்பதற்கு பெருமளவு உதவியாக இருந்துள்ளார்.

உதவி செய்ய வேண்டும்:இது குறித்து வித்யாஸ்ரீ கூறுகையில்,"படிப்பதாக இருந்தாலும் கூட புத்தகத்தைக் கால்களால் பிரித்துத் தான் படிப்பேன். இப்போது வரை நான் வெளியூர் செல்வதாக இருந்தால் கூட யாருடைய துணையும் இல்லாமல் நான் மட்டுமே பேருந்தில் வெளியூருக்குப் பயணம் செய்வேன்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தற்காலிக பணி ஆணை வழங்கினார். இப்போது கிடைக்கிற அந்த வருமானம் என் குடும்பச் செலவுக்காகவே பயன்படுத்தி வருகிறேன் எனக்கென்று எந்த செலவும் பெரிதாக கிடையாது.ம் எனக்கு கைகள் இல்லையே என்று நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது.

என் லட்சியம் எல்லாம் யாருக்காவது உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும், குடும்பத்திற்குத் தேவையான அளவு வருமானத்தை ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்" என்கிறார் வித்யாஸ்ரீ. இப்போது கிடைத்துள்ள வண்டி தன் வாழ்வில் மேலும் மெருகூட்டும் என்கிறார்.

ஓட்டுநர் உரிமம்:இந்த வண்டியை வடிவமைத்த சங்கர் கூறும் போது, "கால்கள் செயலிழந்து போனவர்களுக்காக வாகனங்களைத் தயார் செய்து கொடுக்கிற நிறுவனம் வைத்துள்ளேன். இதுவரை கால்கள் இல்லாதவர்களுக்கு தான் வாகனம் தயார் செய்து கொடுத்திருக்கிறேன். முதல் முறையாக வித்தியாவிற்கு கைகள் இல்லாதவர்கள் கால்களாலே இயக்கக்கூடிய இரு சக்கர வாகனத்தை வடிவமைத்திருக்கிறேன். தமிழக அரசு வித்யஸ்ரீக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க:கோவையில் MyV3 Ads-க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details