தமிழ்நாடு

tamil nadu

விஜய் அரசியல் பிரவேசம்: அரசியல் தலைவர்கள் கருத்து என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 9:37 PM IST

TVK Vijay: பொதுமக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வைகோ,எல்.முருகன் பேட்டி
வைகோ,எல்.முருகன் பேட்டி

வைகோ,எல்.முருகன் பேட்டி

சென்னை:நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களையும், வரவேற்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொது செயலாளர் வைகோ விஜய் குறித்து பேசுகையில், "ஜனநாயகத்தில் வாக்குரிமை எப்படி உறுதிபடுத்தப்பட்டு உள்ளதோ அதுபோல் யாரும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜயை பின்பற்றி வரக்கூடிய ரசிகர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அவ்வப்போது சில நல்ல காரியங்கள் செய்து உள்ளார்.

இப்போது அரசியல் கட்சி தொடங்கும் முயற்சி எடுக்கிறார். கட்சி தொடங்கும் போது எதுவும் சொல்ல கூடாது. அவரது முயற்சி தமிழ்நாட்டிற்கு நல்லதாக அமையட்டும்" என்றார். அதேபோல், சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஜனநாயகத்தின் தாய் இந்தியா.

கட்சி ஆரம்பித்து பொது மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழகத்தை சேர்ந்த சிறந்த சினிமா நடிகர் விஜய். கட்சி தொடங்கி மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும் என்பதற்காக வந்து இருக்கிறார். இதை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஒவ்வொரு கட்சியும் ஒரு கொள்கையை சொல்வார்கள். தமிழகத்தில் ஊழல் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு ஊழலில் ஊறி போய் உள்ளது. 2ஜி தொடங்கி தமிழ்நாட்டிற்கு அவமானத்தை தந்த ஊழல் எல்லாம் தமிழக அரசியல்வாதிகளால் செய்யப்பட்டு உள்ளது.

ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நல்ல அரசு தர வேண்டும் என்பதற்காக தான் பிரதமர் மோடி சிறந்த நிர்வாகத்தை தந்து கொண்டு இருக்கிறார். அது போல் விஜய் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. மத அரசியல் என தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். மத அரசியல் கிடையாது. ராமர் கோயிலை மட்டும் வைத்து சொல்ல கூடாது.

கோயில் என்பது மத வழிபாடு முறை. இந்து தர்மம். இந்து என்பது தர்மம் அறவழியானது. ஆன்மீக இடத்திற்கு செல்வதை மத அரசியலாக எடுத்து கொள்ள கூடாது. ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் அரசியல் இருக்க வேண்டும் என்று எல்லாரும் சொல்வது தான். அதை அவர் சொன்னால் வரவேற்கத்தக்கது" என்றார்.

இதையும் படிங்க:எந்த நேரத்திலும் எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details