தமிழ்நாடு

tamil nadu

சொத்து பிரச்சனையில் தாய் மாமன் சுத்தியலால் அடித்து கொலை; கன்னியாகுமரியில் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 4:31 PM IST

Kanyakumari Murder: கன்னியாகுமரியில் சொத்து பிரச்சனையில் தாய் மாமனைச் சுத்தியலால் அடித்து கொலை செய்த வழக்கில் மருமகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சொத்து பிரச்சனையில் தாய் மாமன் சுத்தியலால் அடித்து கொலை
சொத்து பிரச்சனையில் தாய் மாமன் சுத்தியலால் அடித்து கொலை

கன்னியாகுமரி: திருவட்டாறு அடுத்த செங்கொடி சதவிளை தோப்பை பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி அருள் தம்பி(64) மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சரோஜா. இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகளும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஸ்டான்லி அருள் தம்பியின் அக்கா குளோரிபாய் மகன் செல்வின் ஜெபக்குமார்(41) மண் விளை அடுத்த கல்லன் குழி என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

திருமணமான இவர் மனைவி, மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வசித்து வருகிறார். தாய்மாமன் என்ற முறையில் ஸ்டான்லி அருள் தம்பி அறிவுரை கூறிய போதும் செல்வின் ஜெபக்குமார் அதனை பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்டான்லி அருள் தம்பிக்கும் அவருடைய உறவினர்களுக்கும் சொத்து சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஸ்டான்லி அருள் தம்பிக்கு எதிராக செல்வின் ஜெபக்குமார் செயல்பட்டு வந்ததாகவும், இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (பிப்.19) மதியம் வழக்கு தொடர்பாக ஸ்டான்லி அருள் தம்பி தக்கலை நீதிமன்றத்திற்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது ஸ்டான்லி அருள் தம்பி கல்லன் குழி பகுதியில் சென்ற போது அவரை செல்வின் ஜெபக்குமார் வழிமறித்து சொத்துக்காக எங்கே செல்கிறாய் எனக் கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த செல்வின் ஜெபக்குமார் சுத்தியலை எடுத்து ஸ்டாலின் அருள் தம்பியின் முகத்தில் சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பி ஓடியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஸ்டான்லி அருள் தம்பியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து திருவட்டார் காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வ ஜெபக்குமாரை தேடி வந்தனர். பின்னர், வேர்க்கிளம்பி பகுதியில் செல்வ ஜெபக்குமார் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஆய்வாளர் சீதா லட்சுமி, துணை ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பட்டப் பகலில் தாய் மாமனைச் சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:காருக்கு அடியில் சிக்கிய பைக்; தீயில் கருகி உயிரிழந்த 10ஆம் வகுப்பு மாணவன்.. கன்னியாகுமரியில் கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details