தமிழ்நாடு

tamil nadu

“சேலத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது” - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்! - Lok Sabha Election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 4:42 PM IST

Updated : Apr 9, 2024, 5:05 PM IST

Udhayanidhi Stalin Election Campaign: சேலத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாவட்டத்தை பற்றி எதுவும் தெரியாது எனவும், அவர் தவழ்ந்து சென்று தான் பதவியைப் பெற்றார் என்றும் விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

சேலம்:நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாக வாக்குகளைச் சேகரிப்பதற்கு வாக்காளர்களைச் சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (ஏப்.9) சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, சேலம் குரங்குச்சாவடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டர். அப்போது அவர் பேசுகையில், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றி உள்ளது.

தற்போது அறிவித்துள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதி அனைத்தும் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாவட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அவர் ஒரு சுயநலவாதி. அவர் தவழ்ந்து சென்று தான் பதவியைப் பெற்றார். அதுபோல, அவர் அறிவும் தவழ்ந்து தான் செல்கிறது.

அவருக்கு இப்போது புதிய பெயரை சேலம் மாவட்டத்தில் அறிவிக்கிறேன். பாதம் தாங்கி பழனிசாமி என்பது தான் அவரது புதிய பெயர். சசிகலாவின் காலைப் பிடித்து பதவியை வாங்கியவர் தான் இந்த பழனிசாமி. அவர் தவழ்ந்து தான் செல்வார். ஆனால், அவர் சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை, டிடிவி தினகரனுக்கும் உண்மையாக இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உண்மையாக இல்லை, மோடிக்கும் உண்மையாக இல்லை.

நிச்சயமாக மக்களுக்கும் அவர் உண்மையாக இருக்க மாட்டார் என்பதே உண்மை. அதனால் தான் பாதம் தாங்கி பழனிசாமி என்ற பெயர் அவருக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி வருகிறார்.

தமிழ்நாட்டில் வீடு எடுத்து தங்கினாலும், பிரதமர் மோடியால் வெற்றி பெற முடியாது. சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர் பிரதமர் மோடி. திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் தான் வாழ்கிறது என்று பிரதமர் மோடி கூறுகிறார். அவர் சொல்வது சரியே. ஆமாம், ஒட்டுமொத்த தமிழ்நாடும் திமுக குடும்பம் தான்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:''திமுக, பாஜகவோடு கூட்டணி வைக்கும் போது, சமூக நீதிப் பேசிக் கொண்டிருந்ததா?'' - சீமான் கேள்வி! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 9, 2024, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details