தமிழ்நாடு

tamil nadu

கஞ்சா விற்ற இருவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 4:18 PM IST

Madras High Court: சென்னை பாரிமுனை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Anti Narcotics Special Court
போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்

சென்னை: சென்னை பாரிமுனையைச் சேர்ந்த அப்பன்ராஜ் மற்றும் குரு ஆகிய இருவரையும், 6 கிலோ 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக எஸ்பிளனேட் காவல் துறையினர் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும், தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறை தரப்பில், சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணை, சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை பாதிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பு அறையில் இருந்த கஞ்சா, முழுமையாக சேதமடைந்து விட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டது ஆவணங்களின் மூலம் தெரிய வந்தது. இதை அடுத்து, வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள், “குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவை, வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றாலும், ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில், கஞ்சா கைப்பற்றப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார். மேலும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:“என்ன மன்னிச்சிருங்க டாடி.. மன்னிச்சிருங்க” கண்ணீர் மல்க பேசிய ராஜ்கிரணின் வளர்ப்பு மகள்!

ABOUT THE AUTHOR

...view details