தமிழ்நாடு

tamil nadu

“திமுக எப்படியோ அப்படித்தான் எடப்பாடி பழனிசாமி” - டிடிவி தினகரன் கூறியது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 7:00 PM IST

TTV Dhinakaran: அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியை ஏன் கொண்டு வந்தோம் என கடும் கோபத்தில் உள்ளனர் என்றும், அந்த கோபம் திமுகவின் கூட்டணியையே வீழ்த்தப் போகிறது எனவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran
டி.டி.வி தினகரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று (பிப்.04) திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார்.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஜி‌.கே.வாசன் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "பாஜக அனுப்பி, நான் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகவில்லை என்றும், நான் நட்பு ரீதியாக மட்டும்தான் போய் பார்த்து வந்தேன் என்றும் தெளிவாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்" என்று பதில் அளித்தார்.

தொடர்ச்சியாக பேசிய அவர், "உறுதியாக நாங்கள் கூட்டணியில் போட்டியிடுவோம் என்கிற நிலைப்பாட்டில்தான் உள்ளோம் உறுதியான பிறகு நாங்களே கூறுகிறோம். எப்படி தீய சக்தி திமுகவுடன் நாங்கள் பயணிக்க முடியாதோ, அதேபோல் துரோக சக்தி எடப்பாடி பழனிசாமியுடன் அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயணிக்க மாட்டார்கள்.

மேலும், எந்த காலத்திலும் பழனிசாமி என்ற துரோகியுடன் நாங்கள் இணைந்து செயல்பட மாட்டோம். அதேபோல, ஜெயலலிதாவினுடைய உண்மையான தொண்டர்கள் என்று, தங்களை நம்புபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஓபிஎஸ்-ம், நானும் தேர்தலைத் தாண்டி அரசியலில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து, 40 தொகுதிகளிலும் தாங்கள்தான் வெல்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அதெல்லாம் பகல் கனவு, நிச்சயம் பலிக்காது. எடப்பாடி பழனிசாமி, எப்போதும் ஜெயிக்கப் போவதில்லை. அவர் வீழப்போகிற நேரம் இது" என கூறினார்.

தொடர்ச்சியாக திமுகவின் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட கேள்விக்கு, "திமுக ஓட்டிற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என முடிவு எடுத்து இருப்பதாக தகவல். கடந்த மூன்று ஆண்டு ஆட்சிக் காலத்தில், மக்கள் திமுக ஆட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஏன்டா இந்த ஆட்சியைக் கொண்டு வந்தோம் என பெரிய வருத்தத்தில் உள்ளனர். அந்த கோபம் திமுகவின் கூட்டணியையே வீழ்த்தப் போகிறது" என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:“10 லட்சம் பேர் எழுதிய CAT தேர்வில் 99.4% எடுத்து தேர்ச்சி பெற்றேன்” - துரைமுருகன் பேச்சுக்கு அண்ணாமலை பதில்!

ABOUT THE AUTHOR

...view details