தமிழ்நாடு

tamil nadu

ஈழத்தமிழ்ப் பெண்ணுக்கு வாக்குரிமையா? - திருச்சி ஆட்சியர் கூறிய விளக்கம் என்ன? - Lok Sabha Election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 12:49 PM IST

Updated : Apr 18, 2024, 6:11 PM IST

Sri Lankan Camp Voter ID issue: திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 2 பெண்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு மட்டும், வாக்களிக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், மற்றொருவரின் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருச்சி:திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிக்கும் 38 வயதான நளினி கிருபாகரன் என்ற பெண் தேர்தல் ஆணைத்திடம் இணைய வழி மூலமாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து, கடந்தாண்டு வாக்காளர் அடையாள அட்டை பெற்ற நிலையில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.

அதாவது, இவரது பெற்றோர்கள் இலங்கைத் தமிழர்கள். இலங்கையிலிருந்து வந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் முகாமில் 1985ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு, 1986ஆம் ஆண்டு மண்டபம் முகாமில் நளினி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், இந்திய நாட்டில் பிறந்தாலும் இந்திய குடியுரிமை பெற முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், நளினி சில வருடங்களுக்கு முன்பு, முதன்முறையாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த போது, சட்டச் சிக்கல் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் வழக்கறிஞர்கள் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகியுள்ளார். அதுதொடர்பான வழக்கு சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நடந்துள்ளது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அப்பெண்ணிற்கு பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதனையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு பாஸ்போர்ட் கிடைத்துள்ளது.

பின்னர், நளினி பாஸ்போர்ட் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர் அடையாள அட்டைப் பெற தேர்தல் ஆணையத்திற்கு இணைய வழி மூலமாக விண்ணப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஆவணங்களைச் சரிபார்த்த தேர்தல் ஆணையம் அஞ்சல் மூலமாக வாக்காளர் அடையாள அட்டையை நளினிக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் அவர் நாளை வாக்களிக்க உள்ளார்.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை ஈடிவி பாரத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் பேசியதாவது, "1987 ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் பிறந்தோருக்கு, குடியுரிமை வழங்க வேண்டும் என விதி உள்ளது. இதனடிப்படையில் நீதிமன்றத்திற்கு சென்று சட்ட ரீதியாக அந்த பெண் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதனை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையும் பெற்றுள்ளார். இதனால் அவர் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். ஆனால் இதே நளினி என்ற பெயரில் வேறொரு பெண்ணும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். அவரது வாக்காளர் அட்டை ரத்து செய்யப்படுகிறது" என விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: கோவை பூலுவபட்டி அருகே பாஜகவினர் பணப்பட்டுவாடா முயற்சி.. ரூ.81 ஆயிரத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 18, 2024, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details