தமிழ்நாடு

tamil nadu

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆகாய நடைமேம்பாலம் - டெண்டர் கோரிய தமிழக அரசு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 6:56 PM IST

Kilambakkam bus stand: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னை:கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக கூட்டம் சேர்வதாலும், சென்னை நகரின் பகுதிக்குள் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பயன்பாட்டிற்கு நடைமுறைபடுத்தப்பட்டது.

இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் வந்து செல்ல வசதியாக இருக்க வேண்டும் என்பதால் செங்கல்பட்டு, தாம்பரம் இடையே கிளம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ரயில் நிலையத்தில் இருந்து மக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல ஆகாய நடைமேடை அமைக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இதன் டெண்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 400 மீட்டர் நீளத்திற்கு இந்த ஆகாய நடைமேடை அமைக்கப்பட உள்ளதாகவும் இந்த பணியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளதாகவும் பிப்ரவரி 4ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கிகள் வசதியுடன் இந்த நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளுடன் இந்த ஆகாய நடைமேடை அமைக்கப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனவரி 30ஆம் தேதியில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க:ஸ்பெயினின் ரோக்கா நிறுவனம் தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு!

ABOUT THE AUTHOR

...view details