தமிழ்நாடு

tamil nadu

புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கு; உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 10:30 PM IST

Chennai High Court: புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான மேல்முறையீடு வழக்குகளில் அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தனை இணைப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தைக் கலைத்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், சேகரித்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கும்படியும், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படியும் 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அதனடிப்படையில், விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையிலிருந்தன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இந்த மேல்முறையீடுகளைத் திரும்பப்பெற உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசின் மேல்முறையீடு வழக்குகளில் தன்னை இணைக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயவர்த்தன் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ்பாபு அமர்வில் இன்று (ஜன.23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்தார்.

ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரைப் போலவே இருந்ததால், ஜெயவர்த்தனின் புகார் முடித்து வைக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முறைகேடு புகாரில் முறையாக விசாரணை நடத்தாமல், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப்பெற அரசு ஆர்வம் காட்டுவதால், தனது தரப்பு விளக்கத்தைக் கேட்ட பிறகே நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென ஜெயவர்த்தன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் P.வில்சன் ஆஜராகி, மேல்முறையீடு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்த நிலையில், அதை ஏற்காமல் நீதிமன்றம் தாமதிக்க முடியாது என்றும், இந்த வழக்கில் ஜெயவர்த்தன் தரப்பு விளக்கத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி, கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அரசு தலைமை வழக்கறிஞர் P.S.ராமன் ஆஜராகி, ஆணையத்தைக் கலைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை இந்த அரசு ஏற்றுக்கொள்வதால், மேல்முறையீடு வழக்குகளை திரும்பப்பெற முடிவெடுத்துள்ளதாகவும், இதில் தன்னை இணைத்துக் கொள்ள ஜெயவர்த்தனுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் விசாரணையைப் பிப்ரவரி 1ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் ஜெயவர்த்தன் இந்த வழக்கைத் தாக்கல் செய்வதற்கு உள்ள உரிமை குறித்த வாதங்களை அனைத்து தரப்பும் முன்வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:"முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவசரமாகத் திறந்தது பாஜகவின் தேர்தல் தந்திரம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details