தமிழ்நாடு

tamil nadu

சௌமியா அன்புமணியின் வியூகம்! ஸ்டாலினின் பிரசாரம் தருமபுரியை தகர்க்குமா? - MK STALIN election campaign

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 2:32 PM IST

MK Stalin Election Campaign:முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

MK STALIN ELECTION CAMPAIGN
MK STALIN ELECTION CAMPAIGN

தருமபுரி:தமிழகத்தில் நாடளுமன்ற தேர்த்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று (வெள்ளிகிழமை) மாலை தர்மபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தருமபுரியில் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் கோபிநாத் ஆகிய இருவரையும் ஆதரித்து மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.

இதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு செய்து பொதுக் கூட்ட மேடைக்கான தயாரிக்கும் பணிகளைக் கண்காணித்து வருகிறார். முதலமைச்சர் வருக்கையையொட்டி பிரம்மாண்ட மேடை மற்றும் அலங்கார வளைவுகள், பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் கொடிகள் கட்டப்பட்டு வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் விமான நிலையத்தில் இருந்து, கார் மூலம் தருமபுரிக்கு வருகிறார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

மும்முனை போட்டி:தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். தொகுதியில் வன்னியர் வாக்கு சதவீதம் குறைவான பகுதிகளான அரூர் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு சௌமியா அன்புமணி பிரசாரத்தை துரிதப்படுத்தி வருகிறார். பா.ம.க.வுக்கு பாரம்பரியாமாக உள்ள வன்னியர் வாக்கு வங்கிகளோடு மற்ற சமூகத்தினரின் வாக்குகளையும் கணிசமாக பெற வேண்டும் என்பது இவரது வியூகமாக உள்ளது. அரூரைச் சேர்ந்த முரளிசங்கர் விழுப்புரம் மக்களவை தனித் தொகுதியில் பா.ம.க. சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனையும் குறிப்பிட்டு சௌமியா அன்புமணி வாக்கு சேகரித்து வருகிறார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் அதிமுக வேட்பாளர் அசோகன் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் ஆளும் கட்சியான திமுக சார்பாக ஆ.மணி போட்டியிடவுள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருமபுரி அரசியல் களத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

அமைச்சர் பேட்டி:முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறுகையில், "மகளிருக்கான உரிமை தொகை, கட்டணமில்லாத பேருந்து உள்ளிட்ட மக்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்களை முதல்வர் செய்துள்ளார். அந்த சாதனைகள், கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமை, வேட்பாளர்களின் உழைப்பு உள்ளிட்டவை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதியாக இருக்கிறது. 40க்கு40 தொகுதிகளிலும் திமுக வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

தேர்தலுக்குத் தேர்தல் பாமகவினர் வேடந்தாங்கலுக்கு வரும் சீசன் பறவைகள் போல, இடம் மாறி வருகின்றனர். ஆனால் திமுக அப்படியல்ல, சீசனுக்கு மாறுகிறவர்கள் அல்ல, தேர்தல்களில் ஒரே கூட்டணி, ஒரே கொள்கையுடன் தொடர்கிறோம்.

எல்லா தேர்தல்களிலும் கூட்டணியாக இருக்கிறோம். ஆனால் பாமக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவினரோடு கூட்டணி, தற்போது வேறு ஒரு கட்சியோடு கூட்டணி, உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, என இடம் மாறிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் திமுக அப்படியல்ல" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது நாதகவினர் தாக்குதல்? - கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details