தமிழ்நாடு

tamil nadu

உள்ளாடையில் ஒளித்து தங்கம் கடத்திய விமான நிலைய ஊழியர்கள்.. கடத்தல் ஆசாமியை தேடும் பணி தீவிரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 4:00 PM IST

Updated : Mar 7, 2024, 5:00 PM IST

Gold smuggling in Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் தங்கக் கட்டிகளை கடத்த உதவிய விமான நிலைய தரைக் கட்டுப்பாட்டு பராமரிப்பு பணியாளர்கள் 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய கடத்தல் நபரை தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சிங்கப்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்றைய முன்தினம் நள்ளிரவு தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்துள்ளது. அந்த விமானத்தில் பெரிய அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனை அடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை தனிப்படை அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்று, சென்னை விமான நிலையத்தின் உள்பகுதிக்குச் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த தனியார் பயணிகள் விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் Ground Staff எனப்படும் தரைக் கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் 3 பேர், அந்த விமானத்திற்குள் அவசரமாக ஏறி, சிறிது நேரத்தில் விமானத்தின் பின்பக்கம் வழியாக இறங்கி வந்துள்ளனர். இதனை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்துள்ளனர்.

பின்னர் 3 பேரையும் நிறுத்தி, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களை முழுமையாக பரிசோதித்துள்ளனர். அப்போது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சல்களைக் கைப்பற்றினர்.

3 பேரிடம் மொத்தம் 2 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.2 கோடி என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், சிங்கப்பூரிலிருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்து இவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்ற கடத்தல் ஆசாமி யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்ட தனியார் விமானத்தில் உள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் விமான நிலையத்தின் உள்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் ஆகியவற்றில் பதிவாகிய காட்சிகளைக் கைப்பற்றி, அதன் மூலம் தப்பிச்சென்ற கடத்தல் ஆசாமியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:49 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.. தொடர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

Last Updated : Mar 7, 2024, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details