தமிழ்நாடு

tamil nadu

“பணம் இருக்கக் கூடிய இந்துக்களுக்கு மட்டுமே பாஜக வேலை செய்கிறது” - கனிமொழி பேச்சு! - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 3:17 PM IST

Thoothukudi DMK Candidate Kanimozhi: நாட்டை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நிற்கக்கூடிய கட்சி பாஜக தான் எனவும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Thoothukudi DMK Candidate Kanimozhi
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி

தூத்துக்குடி:தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று (புதன்கிழமை), திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, "வெயிலைக் காரணம் காட்டி, தேர்தலில் ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள். இந்த நாட்டை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். அது நம் ஒவ்வொருவரின் கடமை. அந்த கடமையைச் செய்வதற்கு, தேர்தலில் நாம் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இந்து மதத்தையும், இந்து மக்களையும் பாஜக தான் காப்பாற்றுவதாக சொல்கிறார்கள்.

பணம் இருக்கக் கூடிய இந்துக்களுக்கு மட்டும் தான் பாஜக வேலை செய்கிறது. சாதாரண, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இந்து மக்களுக்கு எதுவும் செய்யாது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நிற்கக்கூடிய கட்சி பாஜக. இட ஒதுக்கீடு இருந்தால் தான், நமது குழந்தைகள் படிக்க முடியும். நமது பிள்ளைகள் படிக்கக் கூடாது என்று நீட் தேர்வைக் கொண்டு வந்தனர்.

இப்போது, புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து, நமது குழந்தைகள் கலைக் கல்லூரிக்கு கூட செல்ல முடியாதபடி நுழைவுத் தேர்வை கொண்டு வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அடிமையாக வாழ்ந்தது போல, மீண்டும் ஆதிக்க சக்திகள், உயர்ந்த சாதிகள் நம் மீது ஏறி நடக்கக்கூடிய நிலையைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் தான் பாஜக. இதை புரிந்து கொண்டு, அத்தனை பேரும் வாக்களிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு நியாயமாக நிதியைக் கொடுக்கக் கூடிய ஒரு ஆட்சியை மத்தியில் உருவாக்க வேண்டும். பேரிடரின் போது நமக்கு நிவாரணம் கொடுக்க மனம் இருக்கக் கூடிய ஒரு ஆட்சி தான் மத்தியில் அமைய வேண்டும். மோடிக்கு இந்த தேர்தலில் சரியான பாடத்தைச் சொல்லித்தர வேண்டும். பல ஆண்டுகளாக பாஜக உடன் ஒட்டிக்கொண்டு, அவர்கள் செய்த அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருந்த அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இந்தத் தேர்தலில் நாம் ஒரு சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.

மோடி எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்ற மாட்டார். ஆனால், நமது முதலமைச்சர் ஸ்டாலின், கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடியவர். கோயில்கள் எல்லாவற்றையும் காப்பாற்றுகிறோம் என்று சொல்லும் பாஜக, திருச்செந்தூருக்கு என்ன செய்தது? எதற்கெடுத்தாலும் திருச்செந்தூரில் போராட்டம், ஆர்ப்பாட்டம். எத்தனை நல்ல திட்டங்கள் செய்தாலும், எதிர்த்து போராடுவார்கள்.

முதலமைச்சர் அரசு நிதி 100 கோடி ரூபாய் மற்றும் தனியார் மூலம் 200 கோடி ரூபாய் நிதி பங்களிப்பில், மொத்தம் 300 கோடியில் திருச்செந்தூர் கோயிலை உலகம் வியக்கக்கூடிய அளவிற்கு, திருப்பதியை விட சிறப்பாக உருவாக்கி காட்ட வேண்டும் என்றும், திருச்செந்தூருக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் சிரமப்படாமல் வசதியாக வந்து செல்ல வேண்டும் என்றும், இங்கு இருக்கக்கூடிய மக்களின் பொருளாதாரம் உயர வேண்டும் என்றும், 300 கோடி மதிப்பில் இந்த வளாகத்தை மாற்றி அமைக்கக்கூடிய திட்டத்தை தந்திருக்கிறார்.

மேலும், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டமானது, தேர்தல் முடிந்த பிறகு தொடங்கப்படும். திருச்செந்தூருக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரிங் ரோடு அமைக்கப்படும், திருச்செந்தூர் நகராட்சி வரி குறைக்கப்படும். எனவே, வாக்குச் சாவடியில் முதல் பெட்டி, முதல் சின்னம், முதல் பெயர், அது நம்முடைய உதயசூரியன் சின்னம் தான். அதில் வாக்களித்து, எனக்கு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்" என்று பேசினார்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்! தீர்ப்பெழுதப் போகும் மக்கள் - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details