தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் என்னென்ன? ஆட்சியர் விளக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 4:01 PM IST

2024 Lok Sabha election: நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடன் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆட்சியர் லட்சுமிபதி ஆலோசனை மேற்கொண்டார்.

ஆட்சியர் லட்சுமிபதி விளக்கம்
அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் என்னென்ன

தூத்துக்குடி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் மற்றும் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் பலரும் தங்கள் மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் முடியும் வரை, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச்.17) ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி ஆட்சியர் லட்சுமிபதி, அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிகள் குறித்துக் கூறியதாவது, “தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக துவங்கப்பட்ட செயல் திட்டங்கள் தொடரலாம். இதற்கு எந்த தடையும் கிடையாது. அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் குறித்த முறையான தகவல்களை, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்து உரிய அனுமதிகளைப் பெறுதல் வேண்டும்.

தேர்தல் பிரச்சாரம்:அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் துவங்கும் நேரம் மற்றும் இடம், பின்பற்ற வேண்டிய பாதை மற்றும் பிரச்சாரம் முடிவடையும் நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே தீர்மானித்து, காவல்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதியைப் பெறுதல் வேண்டும். கோயில்கள், மசூதிகள், தேவாலயம் (church) போன்ற வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் குறித்து எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது.

ஆட்சியில் இருக்கும் கட்சி, அரசின் சாதனைகள் தொடர்பாக பொது கருவூலத்தின் செலவில் விளம்பரங்கள் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளருக்கு எந்தவிதமான நிதியும் வழங்கக்கூடாது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளின் 48 மணி நேரத்திற்கு முன்பாக, ஓட்டுச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விளம்பரங்கள், ஓட்டு சேகரிப்பு செய்தல், பொதுக்கூட்டங்கள் ஆகியவை மேற்கொள்ளக்கூடாது.

வாக்காளர்களை ஓட்டுச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பொதுக்கூட்டங்கள் அல்லது பிரச்சார ஊர்வலங்களால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. தேர்தல் அமைதியாக நல்ல முறையில் நடக்க அனைத்து அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், டிஆர்ஓ அஜய் சீனிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜகுரு, தேர்தல் தாசில்தார் தில்லை பாண்டி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.. அடுத்த திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details