தமிழ்நாடு

tamil nadu

"1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள தமாகாவிற்கு சைக்கிள் சின்னம்”.. தூத்துக்குடியில் சீமான் குற்றச்சாட்டு! - Seeman Speech in Thoothukudi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 4:22 PM IST

NTK Chief Coordinator Seeman Speech:”7 சதவீதம் வாக்கு வாங்கி உள்ள நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடையாதாம். ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு வங்கி உள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டுள்ளது” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

thoothukudi-campaign-naam-tamilar-party-coordinator-seeman-spoke-about-tamil-maanila-congress-gk-vasan
"1% வாக்கு இல்லாத தமாகாவினர் கூட்டணியில் உள்ளார்கள் என்பதால் சின்னம் ஒதுக்கீடு" - பாஜக மீது சீமான் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஜா.ரொவினா ரூத் ஜேன் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரேஸ்புரம் பகுதியில் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜென்-ஐ ஆதரித்து, திறந்த வெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "ஒரு பக்கம் அணு உலை, இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலை, எண்ணற்ற நச்சு ஆலைகள் நம் நிலத்தை, வளத்தை, காற்றை, நீரை எல்லாவற்றையும் விஷமாக மாற்றியதை எதிர்த்து எவ்வளவு போராட்டங்களைச் செய்தாலும், அதை கண்களைக் கொண்டு பார்க்காத, காது கொடுத்து கேட்காத இதயமற்ற ஒரு அரக்க குணம் உள்ளவர்களிடத்தில் திரும்பத் திரும்ப அதிகாரத்தைக் கொடுத்து ஆட்சியில் அமர்த்தி விடுகின்றோம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஜெயலலிதா, கருணாநிதிக்கு தெரியாமல் அணில் அகர்வால் இங்கே எப்படிக் கொண்டு வந்தார்? நாம் ஒரு தடவை தவறு செய்யலாம். ஆனால், ஒவ்வொரு தடவையும் தவறு செய்யக்கூடாது. அது பைத்தியக்காரன் கூட செய்ய மாட்டான். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கத்தான் போனார்கள். ஆனால், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்த ஆர்டர் கொடுத்தது யார்? எங்கே இருந்து உத்தரவு வந்தது?

கனிமொழி நாடார் என்று நம்பும் நபர்கள் தான் நீங்கள் (மக்கள்). ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் தேர்தல் பணம் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியோர் வாங்கி உள்ளனர். அப்போது அவர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தானே இருப்பார்கள். இல்லை மக்களுக்காக இருப்பார்களா? குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள் தான் திமுகவினர். அப்போது, திமுகவினர் பாஜக கூட்டணியில் இருந்தனர். ஆனால், இப்பொழுது கூட்டணி இல்லாததால், மணிப்பூர் கலவரத்தைப் பற்றி திமுகவினர் பேசுகிறார்கள்.

7 விழுக்காடு வாக்கு வாங்கி உள்ள நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ள வாக்கு வங்கி உள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு அவர்கள் கேட்ட சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கூட்டணி, அவர் எப்போது, எந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார். தமிழ்நாட்டு அரசியலில் ஒத்த ஆளாக நான் கதற விடுகிறேன். தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்திற்கு 40 பேரை அனுப்பிவிட்டுப் பார் அவ்வளவு தான்.

மேலும், என்னிடம் கட்சிகள் பேரம் பேசின, தெருக்கோடியில் கூட நிற்பேன். கையேந்தி பிச்சை கூட எடுப்பேன். ஆனால், பேரத்திற்கு அஞ்ச மாட்டேன். மீன் பிடிக்கச் செல்லும்போது காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்கு ஹெலிகாப்டர் வசதி இருக்கிறதா? மீனவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? வேளாண்மை அரசுப் பணியாளர்கள் செய்வதோடு, மீன்பிடியையும் அரசுப் பணியாகச் செய்வேன். வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடிய மீன்களை அரசு கொள்முதல் செய்து அனுப்பும். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படுவது தடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க:அமலாக்கத்துறையின் தொடரும் ஆம் ஆத்மி வேட்டை! டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்! - Kailash Gahlot

ABOUT THE AUTHOR

...view details