தமிழ்நாடு

tamil nadu

குன்றத்தூரில் நர்சரி கார்டன் உரிமையாளர் கொலை சம்பவத்தில் மகன் கைது! பிடிபட்டது எப்படி? - Nursery Garden Owner Murder

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 10:58 PM IST

Kundrathur Nursery Garden Owner Murder: சென்னை குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் உள்ள நர்சரி கார்டன் உரிமையாளர் தங்கதுரை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kundrathur Nursery Garden Owner Thangadurai Murder
Kundrathur Nursery Garden Owner Thangadurai Murder

சென்னை: குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம், சக்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை (70), இவர் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், அஞ்சுகம் நகர், குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நர்சரி கார்டன் வைத்து நடத்திவந்தார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், தினமும் நர்சரி கார்டனில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று நர்சரி கார்டனில் படுத்திருந்த தங்கதுரை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக, தகவல் கிடைக்கப்பட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கதுரையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

மேலும், அவரது கையில் அணிந்து இருந்த மோதிரம் திருடு போனதையடுத்து நகைக்காகக் கொலை நடந்திருக்குமா அல்லது முன்விரோதம் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அவரது மகன் ராபின் என்ற ராபின்சன் (43), என்பது தெரியவந்தது. இதையடுத்து, ராபினிடம் விசாரித்த போது தான் கொலை செய்யவில்லை எனவும் கொலை சம்பவம் நடந்த அன்று தனது குடும்பத்தினருடன் ஈஸ்டர் பண்டிகைக்காகத் தேவாலயத்தில் இருந்ததாகவும் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களைக் காண்பித்ததால் போலீசாருக்கு விசாரணை செய்வதில் குழப்பம் ஏற்பட்டது.

இதன் பின்னர், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவு நேரத்தில் மூன்று முறை ராபின் நர்சரி கார்டன் இருக்கும் இடத்திற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனை ஆதாரமாக வைத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், தந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும், இவரது அண்ணன் டென்னிஸ் ராஜ் இறந்து போன நிலையில் அவரது நிலத்தை தங்கதுரை விற்பதற்கு முடிவு செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ராபின் தனது தந்தையைக் கொலை செய்ய முடிவு செய்து, ஈஸ்டர் தினத்திற்கு முந்தைய தினம் தனது குடும்பத்தினர் அனைவரையும் தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் நர்சரி கார்டனுக்கு வந்தபோது தனது தந்தை உறங்காமல் மது அருந்திக் கொண்டிருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து குடிபோதையில் படுத்திருந்த தனது தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ராபினை, போலீசார் கைது செய்தனர். அண்ணனின் நிலத்தை விற்பனை செய்ய முயன்ற தந்தையைக் கொலை செய்து விட்டு பதட்டம் ஏதும் இல்லாமல் தனது குடும்பத்தினருடன் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:ஒருதலைக் காதலுக்கு இடையூறு: 3 வயது குழந்தை கொடூரக் கொலை...தருமபுரியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details