தமிழ்நாடு

tamil nadu

"போதைப்பொருளில் இருந்து இளைஞர்கள் விலகி இருங்கள்" - ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 7:15 PM IST

Tamil Nadu Governor RN Ravi: நம் மாநிலத்தில் உள்ள பெற்றோர் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகங்கள் போதைப்பொருட்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tamil Nadu Governor RN Ravi
ஆளுநர் வேண்டுகோள்

சென்னை: இது குறித்து ஆளுநரின் வேண்டுகோளாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமீபத்தில் கணிசமான அளவில் போதைப்பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்களின் பறிமுதல் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பாக தமிழ்நாட்டிலும், மற்ற இடங்களிலும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளது, நமது மாநிலத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாக நிலவிய நமது மோசமான அச்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் தங்களின் பிள்ளைகளின் நிலை குறித்து கவலைப்படும் பெற்றோர், கடந்த ஓராண்டாக மாநிலத்தில் உள்ள கல்வி வளாகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் போன்றவற்றில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் இருப்பது குறித்த தங்களுடைய தீவிர கவலையை கடந்த ஓராண்டுக்கும் மேலாக என்னிடம் பகிர்ந்து வந்தனர்.

மத்திய உளவுத்துறை, புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், சர்வதேச கடத்தல் கும்பலைப் பிடிக்கும் நடவடிக்கையில், நமது மாநிலத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் முக்கிய மூளையாக ஈடுபட்டு வந்தவர்களைக் கண்டறிந்துள்ளன.

இந்த போதைப்பொருள்கள் மிகவும் அடிமையாக்கும் தன்மையையும், அழிவை ஏற்படுத்தவும் கூடியது. இதை பரிசோதிக்காமல் விட்டால், விரைவில் அது நமது எதிர்கால தலைமுறையையே அழித்துவிடும். போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது.

துல்லிய அவசர நடவடிக்கை உணர்வுடனும், மிகுந்த முன்னுரிமையுடனும் இந்த அச்சுறுத்தலைக் கையாள வேண்டும். மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க அமைப்புகள், தங்கள் பணிகளை செய்யும் அதே வேளையில், நம் மாநிலத்தில் உள்ள பெற்றோர் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகங்கள், இதுபோன்ற போதைப்பொருட்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முதன்மை இலக்கு இளைஞர்கள் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய, கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் இதுதான், தயவுசெய்து இதுபோன்ற சலனங்களில் இருந்து விலகி இருங்கள். ஏனெனில், இது உங்கள் வாழ்வையும், குடும்பத்தையும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு அழித்துவிடும்.

இத்தகைய போதைப்பொருள்கள் தங்களுடைய வளாகத்திலோ, அருகாமையிலோ நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது. நமது மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் எதிர்காலத்துக்காகவும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர், ஆளுநர் மாளிகைக்குச் சென்று, தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 7 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை அளித்திருந்தனர்.

மேலும், டெல்லி போதைப்பொருள் விவகாரத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தலில் களமிறங்குகிறார் யூசுப் பதான்.. மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details