தமிழ்நாடு

tamil nadu

வேலூர் மாநகராட்சியில் ரூ.1.84 கோடி உபரி நிதி.. 2024 -2025 நிதிநிலை அறிக்கையில் தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 9:17 AM IST

Vellore Corporation Budget: வேலூர் மாநகராட்சியின் 2024-2025 நிதிநிலை அறிக்கையில் ரூ.1 கோடியே 84 லட்சத்து 82 ஆயிரம் உபரியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Vellore Corporation presents Surplus budget
வேலூர் மாநகராட்சி உபரி பட்ஜெட் தாக்கல்

வேலூர்: வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் நேற்று நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தார். அதன்படி, வேலூர் மாநகராட்சிக்கு வரும் நிதியாண்டில் வரி வருவாய், கல்வி நிதி, குடிநீர் கட்டணம் ஆகியவை மூலம் மொத்த வரவினம் ரூ.794 கோடியே 17 லட்சத்து 11 ஆயிரமாக இருக்கும் என்றும், இவற்றிலிருந்து மொத்த செலவினம் ரூ.792 கோடியே 32 லட்சத்து 29 ஆயிரமாக இருக்கும் என்றும், இதன்மூலம் வேலூர் மாநகராட்சிக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 82 ஆயிரம் நிதி உபரி நிதியாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கையின்படி, "கல்வி நிதியின்கீழ், ரூ.4.20 கோடி மதிப்பில் 12 மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள், ரூ.2.06 கோடியில் 20 பள்ளிகளில் வகுப்பறை பராமரிப்பு, மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதி, மாணவிகளுக்காக நவீன கழிப்பறைகள், அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் அபாகஸ் பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தன்னார்வலர்கள் பங்களிப்புடன் பள்ளிகளில் விளையாட்டு பூங்கா போன்ற திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

வரி வருவாயை கூடுதலாக்க, அனைத்து வரி வசூல் அலுவலர்களுக்கும் வங்கிகள் மூலம் புதிய கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதார பிரிவு சார்பில், ரூ.5.40 கோடியில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டவும், தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதற்கான மையம் 4வது மண்டலத்தில் உள்ள நிலையில், கூடுதலாக 1, 2, 3வது மண்டலங்களிலும் அமைக்கப்பட உள்ளன.

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து மத்திய சிறைத்துறை வசம் ஒப்படைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலர் குப்பைகளை எரியூட்டும் கருவிகள், சர்க்கார் தோப்பு பகுதியில் உள்ளதுபோன்று பிற மூன்று மண்டலங்களிலும் அமைக்கப்பட உள்ளது.

குடிநீர் நிதியின்கீழ், முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் குடிநீர் விநியோம் செய்திட ரூ.12.74 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளன. மேலும், அம்ரூத் திட்டத்தில் 4 மண்டலங்களிலும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படாத பகுதிகளில், ரூ.16 கோடி மதிப்பில் குழாய்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது.

மாநகராட்சியை அழகு படுத்தும் விதமாக பூங்கா சாலையோரங்கள் அமைக்கவும், முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடவும், தொரப்பாடி பெண்கள் சிறைக்கு பின்புறம் அரசு நிலத்தில் பூங்கா அமைக்கவும், வேலூர் கோட்டை அருகே உள்ள நடைமேம்பாலத்தை நவீன முறையில் மின்தூக்கி வசதியுடன் மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, வேலூர் மாநகராட்சி அரசு மருத்துவமனை, வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலைய சாலை நுழைவுப் பகுதிகளில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நுழைவு வளைவு அமைக்கவும், விடுபட்ட அனைத்து தெருக்களிலும் பெயர் பலகைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் அழகிய நீரூற்றுகள் அமைக்கவும், சீர்மிகு நகர் திட்டத்தில் அமைக்கப்பட்ட 93 பூங்காக்களிலும் உடற்பயிற்சி கூடம் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கவும், கூடுதலாக 4வது மண்டலம் புதுமை நகர், கிருபா நகர், திருவள்ளுவர் நகர், அண்ணா நகர் பகுதிகளில் உடற்பயிற்சி கூடம் அமைக்கவும், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள பூங்காக்களில், தனியார் பங்களிப்புடன் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசு நிதியுதவியுடன் நேதாஜி மார்க்கெட் பகுதியிலுள்ள வணிக வளாகத்தை ரூ.50 கோடியில் புனரமைப்பு செய்திடவும், நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள், பூக்களை பாதுகாக்க குளிரூட்டும் அறைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேயர் பேசுகையில், தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக உருவாக்கிட சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 8 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு, ரூ.3 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் நிதியை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கு விரிவுபடுத்தியதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ப.கார்த்திகேயன், துணை மேயர் எம்.சுனில்குமார், ஆணையர் ஜானகி ரவீந்திரன், வருவாய், நிதிக்குழு தலைவர் ரவிக்குமார் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:பரபரக்கும் தேர்தல் களம்.. பிரச்சார வாகனத்தில் அப்படி என்ன இருக்கிறது?

ABOUT THE AUTHOR

...view details