தமிழ்நாடு

tamil nadu

பரோட்டாவால் விபரீதம்; தனியார் கல்லூரி மாணவிகள் 80 பேர் மருத்துவமனையில் அனுமதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 9:28 PM IST

Students were hospitalized due to food poison: கரூரில் தனியார் கல்லூரி விடுதியில் பரோட்டா சாப்பிட்ட மாணவிகள் 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Students were hospitalized due to food poison
பரோட்டாவால் ஏற்பட்ட விபரீதம்

கரூர்: கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள ஆச்சிமங்கலத்தில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இங்குத் தங்கி நர்சிங் பயின்று வருகின்றனர். அந்த நர்சிங் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயின்று வரும் நிலையில், நேற்று (பிப்.24) இரவு அனைவருக்கும் பரோட்டா உணவாக வழங்கப்பட்டுள்ளது.

உணவருந்திய மாணவர்களுக்கு நள்ளிரவு முதல் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து மாணவர்களின் விடுதிக்குச் சென்ற கல்லூரி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட மாணவிகளை ராயனூரில் உள்ள எம்.ஆர்.பி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில், விடுதியில் இருந்த மற்ற மாணவிகளுக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் தனியார் கல்லூரிக்குச் சென்று சிறப்பு முகாம் நடத்தி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் விடுதி மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிகாரிகளின் பரிசோதனைக்குப் பின்னர், அனைவருக்கும் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் கல்லூரி வாகனங்கள் மூலமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து, மாலை 5 மணிவரையில், மொத்தம் 80 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், இரண்டு மாணவிகளுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலிருந்து கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாணவிகளின் பெற்றோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து, கரூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் சந்தோஷ் குமார் கூறுகையில், "கல்லூரியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மாணவிகளுக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. உடல் உபாதைகள் கண்டறியப்பட்ட மாணவிகளுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 24 மணி நேர மருத்துவர்கள் உள்ள தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரியில் உள்ள உணவகத்தில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்" என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:போதைப்பொருள் கடத்தல் விவகாரம்; டெல்லியில் 3 தமிழர்கள் கைது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பிருப்பதாக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details