தமிழ்நாடு

tamil nadu

5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்; குண்டு கட்டாக தூக்கிச் சென்ற காவலர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 5:51 PM IST

SSTA Protest: சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர்ந்து 5வது நாளாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், SSTA-இன் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

SSTA Protest
இடைநிலை ஆசிர்யர்கள் போராட்டம்

இடைநிலை ஆசிர்யர்கள் போராட்டம்

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது. 1.6.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 ரூபாய் என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாய் என உள்ளது. மேலும், ஒரே பணி - ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதை களையக் கோரி, கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண் 311-இல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

புதிய அரசு பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023 புத்தாண்டின் முதல் அறிவிப்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மனுக்கள் அளித்தும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, நேற்று முதல் (22.2.2024) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை வரும் வழியிலேயே பிடித்து காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். மேலும், ஆசிரியர்களை சாலையில் நடக்ககூட விடாமல் காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்து வாகனத்தில் ஏற்றியதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஐந்தாம் நாளாக இன்றும் (23.2.2024) தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டிபிஐ வளாகம் நோக்கிச் சென்ற ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரமாக எடுத்துச் செல்கின்றனர். உயிரை இழந்தேனும் உரிமையை பெறாமல் விடவேமாட்டோம் போன்ற கோஷங்களையும் முழக்கமிட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இடைநிலை ஆசிர்யர்கள் போராட்டம்

இந்நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு, சம ஊதியம்' தேர்தல் வாக்குறுதி 311-ஐ நிறைவேற்றக்கோரி கடந்த 5 நாட்களாக டிபிஐ வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டங்களை நடத்தி வருகிறோம். வருகின்ற சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களும் போராட்டம் தொடரும். மேலும், இதுவரை அரசு அழைத்து கோரிக்கை குறித்து பேசி முடிவு செய்யாத காரணத்தினால், அடுத்த கட்ட போராட்டத்திற்கு எங்களது அமைப்பின் சார்பாக தயாராகிறோம்.

இரண்டொரு நாளில் அழைத்துப் பேசி கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மாநில தலைநகரான சென்னையில் தொடர் முற்றுகை போராட்டமும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கைதாகும் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் கோரிக்கையை அழைத்துப் பேசி முடிவு செய்யாததை கண்டித்தும் மாவட்டத் தலைநகரங்களிலும் (முதன்மைக் கல்வி அலுவலகத்தில்) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எனவே போராட்டத்தை இன்னும் தீவிரமாக்காமல் தமிழக அரசின் முதலமைச்சர் அழைத்துப் பேசி உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கூலித்தொழிலாளி டூ உரிமையியல் நீதிபதி.. மயிலாடுதுறை நபரின் விடாமுயற்சி சாத்தியமானது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details