தமிழ்நாடு

tamil nadu

6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்; 2 மணிநேரம் காவல்துறை வாகனத்திலே ஆசிரியர்களை கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 5:09 PM IST

SSTA Protest: சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து 6வது நாளாக ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

6வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை: தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.

1.6.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 ரூபாய் என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாய் என உள்ளது. மேலும், ஒரே பணி - ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும், இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதை களையக் கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண் 311-இல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

புதிய அரசு பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2023 புத்தாண்டின் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மனுக்கள் அளித்தும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, கடந்த 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்றும் (பிப்.24) சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் போராட முயன்றனர். அப்போது இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக, காவல்துறை வாகனத்திலேயே வைத்து பல்வேறு இடங்களில் சுற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை தங்க வைக்கக்கூடிய இடங்களில் எந்தவித வசதியும் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

மேலும், காவல்துறை தாக்கியதில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் மயக்கம் அடைந்ததாக புகார் எழுந்துள்ளது. நான்கு சுவர்கள் இருந்தால் போதுமா, கொலை குற்றவாளிகளை அடைக்கும் இடம் கூட நன்றாக இருக்கும், உரிமைகளை கேட்கும் ஆசிரியர்களுக்கு இந்நிலையா, எனவே மாற்று இடம் கொடுங்கள், இல்லாவிட்டால் உண்ணாவிரதம் இருப்போம் எனவும் ஆசிரியர்கள் போராட்டத்தின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details