தமிழ்நாடு

tamil nadu

நாளை முதல் காலவறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 1:22 PM IST

Secondary Teachers Protest: சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள், நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Secondary teachers association announced hunger strike from tomorrow
நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது

சென்னை: 10 நாளாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பேசி முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை, நாளை (பிப்.29) முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2009-இல் திமுக ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய முரண்பாடு ஏற்படுத்தப்பட்டது. அதனை களையக் கோரி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் கடுமையான போராட்டங்களை எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக நடத்தி வருகிறோம்.

2018-இல் நாங்கள் DPI வளாகத்தில் கடுமையான காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், எங்களது கரம் பற்றி, திமுக ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக 2009-க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களையப்படும் என்றார். அதன்படியே, திமுக தேர்தல் அறிக்கை 311-இல் இடம்பெற்றது.

ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எங்களுடைய ஒற்றைக் கோரிக்கையைக் கூட நிறைவேறவில்லை. இப்போதும் தமிழக முதலமைச்சர், ஒவ்வொரு கூட்டங்களிலும், 'நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம்' என்று கூறி வருகிறார்கள். ஆனால், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளாக சொன்னதை செய்யவில்லை.

2023 ஜனவரி 1-இல் இந்த ஊதியக் குழு அமைக்கும் போதே, மூன்றே மாதங்களில் உங்களுடைய ஊதிய முரண்பாடுகளை இந்த குழு பரிசீலித்து அறிக்கை அளிக்கும் என்றார்கள். 9 மாதங்கள் ஆகியும் எந்தவிதமான அறிக்கையும் வழங்காமல், அதற்கான முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால்தான், மீண்டும் 2023 செப்டம்பர் கடைசியில் நாங்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்தோம்.

அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கண்டிப்பாக இன்னும் மூன்றே மாதத்தில் குழுவின் அறிக்கையைப் பெற்று, ஊதிய முரண்பாடு களையப்படும் என்றார். தற்போதுவரை குழு எவ்வித முன்னேற்றமும் இன்றி, அதே நிலையிலேயே தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் மூன்று மாதம், மூன்று மாதம் என்று இன்னும் எத்தனை மூன்று மாதங்களாக பேசப் போகிறார் எனத் தெரியவில்லை. 5 மாதங்கள் கடந்தும், இப்போதும் எதுவும் நடைபெறவில்லை.

இது போன்ற சூழ்நிலையில்தான், பணி நாட்களில் நாங்கள் அறவழியிலான அகிம்சை போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இப்போது மீண்டும் எங்களது பிரச்னைக்குத் தீர்வு சொல்லாமல், போராட்டத்தை கைவிடுங்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

ஆசிரியர்கள் மீது பாசத்துடன் இருக்கும் எங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சொன்னதை நிறைவேற்றக் கோரி பத்து நாட்களாக போராடி வரும் ஆசிரியர்களை அழைத்து பேசக்கூட மனமில்லாமல், காவல் துறையினரைக் கொண்டு ஏதோ குற்றவாளிகளைப் போல கைது செய்து, சித்திரவதைக்கு உள்ளாக்கி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வருவது வேதனையளிக்கிறது.

உலகிற்கே சமூக நீதியை எடுத்துரைக்கும் தமிழக முதலமைச்சர், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் சமூக நீதி வழங்க மறுத்து, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இருப்பதை எங்களால் ஏற்க முடியவில்லை. தேசத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமான ஆசிரியர்கள், சமூக நீதி இல்லாமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம் என்பதே முற்றிலும் உண்மை.

விரைவில் தமிழக முதலமைச்சர், 'சமவேலைக்கு சம ஊதியம்' என இடைநிலை ஆசிரியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்ற ஒரு நல்ல அறிவிப்பை அறிவிப்பார் என்ற நம்பிக்கையோடு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் காத்துக் கொண்டு இருக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details