தமிழ்நாடு

tamil nadu

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 1:06 PM IST

Rameswaram fishermen Released: கடந்த ஜனவரி 22ஆம் தேதி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்ற நீதிபதி, மீனவர்களின் விசைப்படகுகளை அரசுடைமையாக்க உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்
கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

இராமநாதபுரம்:கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த ஜன.22ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களை கைது செய்த இலங்கை அரசு, இன்று (பிப்.6) விடுதலை செய்துள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த மாதம் 22ஆம் தேதி மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று, மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகையும், அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனை அடுத்து, அவர்களுடைய சிறைக் காவல் முடிந்து, இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில், ஆறு மீனவர்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி, அவர்களை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும், மீனவர்களுடைய இரண்டு விசைப்படகையும் அரசுடமையாக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். விடுதலை செய்யப்பட்ட ஆறு மீனவர்கள், இன்னும் ஓரிரு தினங்களில் தமிழகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் மட்டுமே முடிவடைந்த நிலையில், இதுவரை 69 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:23 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: கவலையில் மீனவர்கள்..

ABOUT THE AUTHOR

...view details