தமிழ்நாடு

tamil nadu

தருமபுரம் ஆதீனம் விவகாரம்; அதிமுக நிர்வாகியை தேடி புதுச்சேரி விரைந்தது தனிப்படை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 7:13 PM IST

Dharmapuram Adheenam: தருமபுரம் ஆதீனம் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாகக் கூறி மிரட்டல் விடுத்த அதிமுக கிழக்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் செய்யூர் ஜெயச்சந்திரனைத் தேடி, மயிலாடுதுறை தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு சென்றுள்ளனர்.

special-police-team-rushes-to-puducherry-in-search-of-admk-executive-in-case-of-dharmapuram-adheenam-intimidation
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய விவகாரம்; அதிமுக நிர்வாகியைத் தேடி புதுச்சேரி விரைந்தது தனிப்படை..

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக உள்ளவர், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாக, சிலர் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு மிரட்டி பணம் கேட்டதாக புகார் எழுந்தது.

பின்னர், இது தொடர்பாக தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனத் தாளாளர் குடியரசு உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக கிழக்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் செய்யூர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆதினத்தின் சகோதரர் விருத்தகிரி, திமுக பிரமுகர் விஜயகுமாருக்கும், இந்த வழக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

இது தொடர்பாக ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருத்தகிரி அனுப்பிய கடிதத்தில், “நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் பெயரில், காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி. இந்த வழக்கில், திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், இந்த விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தவர்.

என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நபர்களிடமிருந்து விஜயகுமார் பேசி, பிரச்னையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள முயற்சி எடுத்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை. அந்த நபர் ரவுடிகளாக இருப்பதால், காவல்துறையின் உதவியை நாடுவது நல்லது என திருக்கடையூர் விஜயகுமார் அறிவுரையின் பேரிலும், ஆலோசனையின் பெயரிலேதான், நான் காவல்துறையின் உதவியை நாடினேன். எங்களுக்கு உதவி செய்ததைத் தவிர விஜயகுமாருக்கு இந்த வழக்கில் எந்தவித தொடர்பும் இல்லை" என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அதிமுக கிழக்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் செய்யூர் ஜெயச்சந்திரன், புதுச்சேரியில் தலைமறைவாக உள்ளதாக மயிலாடுதுறை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, தனிப்படை போலீசார் அவரை கைது செய்வதற்காக புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.

இதையும் படிங்க:மலைகளின் இளவரசிக்குள் பேய்களின் சமையலறையா? - குணா குகை பற்றி 'மஞ்சுமோல் பாய்ஸ்' கதை உண்மையா?

ABOUT THE AUTHOR

...view details