தமிழ்நாடு

tamil nadu

ரயில் பயணிகளுக்கு மண்பானையில் தண்ணீர் வழங்க ஏற்பாடு - மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அறிவிப்பு! - SOUTHERN RAILWAY DRM

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 3:58 PM IST

Southern Railway DRM: மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு மண்பானைகளில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat (credit' Etv Bharat Tamil nadu)

மதுரை:தமிழ்நாட்டில் கோடைக் காலம் துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (மே 4) முதல் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்பம் பதிவாகி வருகிறது.

வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாவடங்களில் 100 டிகிரியை தாண்டியே வெப்பத்தின் அளவு தொடர்ந்து பதிவாகி வருகிறது.

இதனால் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிக வியர்வை வெளிப்பட்டு உடலில் நீர் சத்து குறைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள், ரயில்வே சாரண சாரணியர், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் மற்றும் தன்னார்வலர்கள் போன்ற பலர் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கு இயற்கையான குளிர் குடிநீர் வழங்க மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, காரைக்குடி, தென்காசி, ராமநாதபுரம், பழனி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் மண் பானைகளில் சேமிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களில் குளிர்ச்சியான குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக இந்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கூறுகையில்,

"கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்ற சூழலில் பயணிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாகத் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மோர், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் பயணிகளின் நீர் சத்து அதிகரிக்க உப்பு, சர்க்கரை கலந்த நீர் கரைசலும் (ors drink) வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் கரைசல் ரயில்வே வாரிய உத்தரவுப்படி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் ரயில் நிலையங்களில் கூடுதலாக 20 குளிர் குடிநீர் சாதனங்கள் பொருத்தப்பட இருப்பதாகவும்" தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் கடும் கோடை வெயிலைச் சமாளிக்க ரயில் பயணங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:5வயது குழந்தையை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்கள்; நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details