தமிழ்நாடு

tamil nadu

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் திறன் மதிப்பீட்டுத் தேர்வு இன்று தொடக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 8:44 AM IST

Skill Past Assessment Test: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கற்றல் விளைவு மற்றும் திறன் மதிப்பீட்டுத் தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.

Skill Past Assessment Test in TN Govt Schools
திறன் மதிப்பீட்டுத் தேர்வு

சென்னை: அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல்‌ விளைவு மற்றும் திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வுகள் இன்று (பிப்.26) முதல் நடைபெற உள்ளன.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் நோக்கத்தில், மாநில மதிப்பீட்டுப் புலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கற்றல்‌ விளைவு மற்றும் திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வு:அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான, கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome Competency Based Test) நடத்த வேண்டும். இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும், https://txam.tnschools.gov.in என்ற மாநில மதிப்பீட்டு புலம் வழியாக இணையதளத்தில் பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் பொழுது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வினாத்தாள் அச்சடிப்பு:மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு கற்றல் விளைவு , திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத்தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும்.ஒவ்வொரு வினாவும், ஒரு மதிப்பெண்ணைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி, அதற்கான விடைகளை அத்தாள்களிலேயே மாணவர்களைக் குறிப்பிடச் செய்ய வேண்டும்.

இத்தேர்வினை, வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில், குறிப்பிட்டுள்ள நாளன்று தவறாமல் நடத்த வேண்டும். இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக, அந்நாள்வரை வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

ஆசிரியர்கள் உறுதி:மேலும், எவ்விதக்‌ குறுக்கீடும்‌ இன்றி மாணவர்கள்‌ தாங்களாகவே விடை எழுதுவதை தலைமையாசிரியர்களும்‌, வகுப்பாசிரியர்களும்‌ உறுதி செய்ய வேண்டும்‌. தேர்வுக்குப் பின் வரும் சுற்பித்தல் நாட்களில், இந்த வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள், வினா அமைப்பு, தேர்வுகளில் தாள்களில் வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும்‌ ஒரு முறை என 6 முதல்‌ 9 ஆம் வகுப்பு வரை அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ கற்றல்‌ விளைவு, திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வுகள்‌ (Learning Outcome and Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ உறுதி செய்ய வேண்டும்‌’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தென்காசி அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு: 2 ரயில்களை காப்பாற்றிய முதியவருக்கு குவியும் பாராட்டுகள்..

ABOUT THE AUTHOR

...view details