தமிழ்நாடு

tamil nadu

கோவையில் சாலையில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் காயம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 5:21 PM IST

Elephant in Coimbatore: கோவையில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, சிறுவாணி சாலை அருகே ஒருவரை விரட்டி தாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தீவிர முயற்சி
ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், தற்போது 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால், காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது.

அவ்வாறு வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழையும் காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதோடு, வீட்டில் வைத்திருக்கும் அரிசி, மாட்டுத் தீவனங்களை சாப்பிடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கரடிமடை, தீத்திபாளையம் பகுதிகளில் சுற்றி வரும் ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதில், இதுவரை மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஒற்றை காட்டு யானை, நேற்று இரவு மதுக்கரை வனச்சரகத்தில் இருந்து, கோவை வனச்சரத்திற்கு உட்பட்ட வேடப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கோவை வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், யானை வனத்துறையினரிடம் சிக்காமல் தப்பித்துள்ளது. இதனையடுத்து, யானையை வனத்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த யானை பேரூர் அடுத்த வேடப்பட்டி குடியிருப்பு பகுதியில் உலா வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சென்று பார்த்த நிலையில், அவர்கள் தேடி வந்த ஒற்றை யானை என்று தெரிய வந்துள்ளது. இந்த யானை சிறுவாணி சாலையை அவ்வப்போது கடந்தும், அருகில் உள்ள வாழைத் தோட்டத்தில் புகுந்தும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால், யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பச்சாபாளையத்தில் இருந்து வெளியேறிய யானை, சிறுவாணி சாலையை கடந்து எதிர்புறம் உள்ள குளத்திற்குள் செல்ல முயன்றுள்ளது. அப்போது, அப்பகுதி மக்கள் கூச்சலிட்டவாறு ஓடியதால், மிரண்ட யானை திடீரென சாலை ஓரம் இருந்த கடைகளுக்குள் புகுந்துள்ளது.

அப்போது, அந்த கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த மருதமுத்து என்பவரை விரட்டி தாக்கியுள்ளது. இதில் கீழே விழுந்த அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை மீட்ட வனத்துறையினர், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், முதியவரை யானை விரட்டி கீழே தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,

தற்போது, பச்சாபாளையம் பகுதியில் அந்த யானை முகாமிட்டு இருப்பதால், வனத்துறையினர் யானையை கண்காணித்து வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால், யானை பார்க்க ஏராளமானோர் குவிந்து வருவதால், யானையை விரட்டுவதில் வனத்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் கூட்டத்தை கலைப்பதற்கு காவல்துறை உதவியை வனத்துறையினர் நாடியுள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இரவு முழுவதும் வேடப்பட்டி, பேரூர் பகுதியில் சுற்றி வந்த யானை, தற்போது வழி தவறி ஊருக்குள் புகுந்துள்ளது. இதனை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்டினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மாலை நேரத்தில் யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் இந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்! குஜராத் பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details