தமிழ்நாடு

tamil nadu

“இது கொடுப்பவருக்கும் எடுப்பவருக்கும் இடையே நடைபெறும் தேர்தல்” - செல்வப்பெருந்தகை தாக்கு! - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 1:07 PM IST

Congress Leader Selvaperunthagai: இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தேர்தல் என்றும், சர்வாதிகாரம் வீழ்ந்தால் தான் ஜனநாயகம் மலரும் என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “தூத்துக்குடி மக்களுக்காக போராடி, வாதாடி பல்வேறு திட்டகளை கொண்டு வந்தவர் கனிமொழி. தூத்துக்குடி என்றாலே ஞாபகத்திற்கு வருவது ஸ்டெர்லைட் ஆலை. அந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எவ்வளவு நாம் போராடினோம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் வாக்கு கேட்க வருகிறார்கள். இதுதான் இன்றைய நிலை. 10 ஆண்டு கால ஆட்சியில் மோடி அளித்த வாக்குறுதிகளை எதையாவது நிறைவேற்றினாரா?

தமிழ்நாட்டின் நலன், பாதுகாப்பு, வளர்ச்சி என அனைத்தையும் மோடி பறித்துக் கொண்டார். அதற்கு துணை போனவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் 2 ஆண்டுகளில் நிறைவேற்றியவர் முதலமைச்சர் ஸ்டாலின். மதிய உணவைக் கொண்டு வந்தவர் காமராஜர், காலை உணவை கொண்டு வந்தவர் ஸ்டாலின்.

ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் தான் மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது விலைமதிக்க முடியாத வாக்குறுதிகளைக் கொண்டது. ஆகையால், உதய சூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும். மக்களுக்கு கொடுப்பவர் ராகுல் காந்தி. மக்களிடம் இருந்து எடுப்பவர் தான் மோடி. மக்களே கொடுப்பவர் வேண்டுமா? எடுப்பவர் வேண்டுமா? நீங்கே முடிவு செய்யுங்கள்” என்றார்.

முன்னதாக திருநெல்வேலி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட செல்வப்பெருந்தகை பேசியதாவது, "இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமான தேர்தல். சர்வாதிகாரம் வீழ்ந்தால் தான் ஜனநாயகம் மலரும்.

வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாத ஆட்சி தான் தற்போது நடந்து வருகிறது. பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பாக இல்லை. பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டும் தான் இந்த ஆட்சியில் பாதுகாப்பு உள்ளது. பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது மோடி வரவில்லை.

மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை. பேரிட நிவாரண நிதியாக முதலமைச்சர் கேட்ட எந்த நிதியும் இதுவரை கொடுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் 80 சதவிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். நடக்கும் 18வது மக்களவைத் தேர்தல் அடுத்த தலைமுறையை காக்கும் தேர்தலாக அமைய வேண்டும். இந்த தேர்தல் கொடுப்பவருக்கும், எடுப்பவருக்கும் இடையே நடைபெறும் தேர்தல்" எனப் பேசினார்.

இதையும் படிங்க:'மோடி விஷ்வ குரு அல்ல; மௌன குருவே' - புதுச்சேரி பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு - MK Stalin

ABOUT THE AUTHOR

...view details