தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு; நீலகிரி அதிமுக செயலாளருக்கு முன் ஜாமீன்! - Nilgiris Lok Sabha Polls

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 2:28 PM IST

Advance bail: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

OOTY CLASH ISSUE
OOTY CLASH ISSUE

சென்னை:நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இரு கட்சியினரும் உதகை நகரில் உள்ள காபி ஹவுஸ் பகுதியிலிருந்து ஊர்வலமாக செல்லத் திரண்டனர். அப்போது பாஜகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அதிமுகவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறி, போலீசாரின் தடுப்பை மீறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்தையும் தாக்கி மோதலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பாஜகவினரும், அதிமுகவினரும் டிபிஓ சந்திப்பில் மீண்டும் கூடினர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் தடியடி நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதிமுகவினரும், பாஜகவினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, பட்டாசு வெடித்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் உதகை மத்திய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத் உட்பட 20 அதிமுக முக்கிய நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழும், பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் மீது 2 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முன் ஜாமீன் கோரி கப்பச்சி வினோத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி T.V.தமிழ் செல்வி, தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராகுமாறு நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெறும் வழி..! அரசு வெளியிட்ட விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details