தமிழ்நாடு

tamil nadu

பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருட்கள் கிடைப்பதைத் தடுக்க வேண்டும் - தேர்தல் அறிக்கை வெளியிட்ட மாணவர்கள்! - Students Election Manifesto

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 5:03 PM IST

Students Election Manifesto: பருவ வயதை அடைந்த மாணவிகளுக்கு தேவையான நாப்கின் மாதம் 2 முறை வழங்க வேண்டும், தொடக்கக் கல்வியில் இருந்து பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தேர்தல் அறிக்கை வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கை வெளியிட்ட மாணவர்கள்
தேர்தல் அறிக்கை வெளியிட்ட மாணவர்கள்

தேர்தல் அறிக்கை வெளியிட்ட மாணவர்கள்

சென்னை: நாட்டில் ஜனநாயக திருவிழாவாகக் கருதப்படும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் தேர்தல் அறிக்கையையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாணவர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை அமையப்பெற்றிருந்தது. இதில் பங்கேற்ற கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், பேசிய கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவர், குழந்தைகளுக்கான கல்விக்கு அளிக்கப்படும் நிதியை உயர்த்த வேண்டும், குழந்தைகளுக்கு என தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், பள்ளி அல்லது அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளில் குழந்தைகள் மாணவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். பள்ளிகளில் பாதுகாப்பு வசதி செய்து தரப்பட வேண்டும். தாய்மொழியை அனைவரும் கற்க வழி செய்ய வேண்டும்.

எங்களது கோரிக்கை எல்லாம் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதில் கோரிக்கைகளை முன் வைத்துப் பேசிய மதுரையைச் சேர்ந்த 16 வயது மாணவன், பள்ளியைச் சுற்றி போதைப் பொருட்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளிகளைச் சுற்றி உள்ள பெட்டிக்கடையில் போதைப் பொருட்கள் கிடைக்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் முழுவதும் போதைப் பொருட்கள் நிரம்பி இருக்கிறது.

5 மற்றும் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட அதன் பாதிப்பு தெரியாமல் கூல் லிப் என்று சொல்லக் கூடிய போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இதனைத் தடுக்க அரசுப் பள்ளிகளைச் சுற்றி உள்ள பெட்டிக்கடைகளைச் சோதனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மதுரையில் உள்ள ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளைச் சுற்றி உள்ள பெட்டிக் கடைகள் மட்டுமல்லாது, டீ கடைகளிலும் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கி, அதைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். சென்னையில் பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் எந்தக்கடையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதைக் கூற முடியவில்லை.

டாஸ்மாக் கடைகளில் 21 வயதிற்குப்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது என கூறும் நிலையில், 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குக் கூட மது விற்பனை செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டினர். போட்டி தேர்வு எதற்காக வைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய மாணவர், பணம் படைத்தவர்கள் மட்டும் மருத்துவர்கள் ஆக முடியும் என்பதற்காகத் தான் நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினர்.

மேலும், நீட் போன்ற போட்டி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு போதுமான அளவில் கழிப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளது. கழிப்பறைகளைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.அதைச் சரி செய்ய வேண்டும். பருவ வயதை அடைந்த மாணவிகளுக்கு 3 மாத்திற்கு ஒரு முறை நாப்கின் வழங்குகின்றனர். அதனை மாற்றி 15 நாட்களுக்கு ஒரு முறை நாப்கின் வழங்க வேண்டும்.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். எண்ணூரில் உள்ள உர தொழிற்சாலையை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அந்தப் பகுதியில் மருத்துவமனை அமைத்துத் தருவதாகக் கூறுகின்றனர். அது தேவையில்லை. வேறு இடத்திற்கு அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை மாற்றி அமைக்க வேண்டும் என மாணவர்கள் கூறினர்.

இதையும் படிங்க:"சௌமியாவுடன் சேர்த்து 401" இது ராமதாசின் லோக்சபா கணக்கு! - PMK Ramadoss

ABOUT THE AUTHOR

...view details