தமிழ்நாடு

tamil nadu

கோடை வெயிலிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுரை! - summer heat protection

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 9:09 PM IST

School Education Department: அதிக வெயில் உள்ள நேரங்களில், மாணவர்களுக்கான வகுப்புகள், விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றைத் திறந்தவெளியில் நடத்துதல் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

School Education Department
School Education Department

சென்னை: கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்துப் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில், "தமிழ்நாட்டில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்குகின்றது. மேலும், பருவ நிலை மாற்றத்தினால் இந்த கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

எனவே, அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, நேரடி வெயில் படும் திறந்தவெளியினை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடல் வேண்டும். இந்த நேரங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள், விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றைத் திறந்தவெளியில் நடத்துதல் கூடாது.

மாணவர்கள் தண்ணீர் தேவையான அளவு பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பாடவேளை துவக்கத்தின் போதும் மாணவர்கள் நீர் அருந்த வாய்ப்புகள் வழங்க வேண்டும். மாணவர்கள் வீட்டிலிருந்து கொண்டுவரும் குடிநீர் அல்லது பள்ளியில் பயன்பாட்டில் உள்ள குடிநீரை அவ்வப்போது பருக வேண்டும்.

பயணத்தின் போதும் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ் மற்றும் வீட்டில் தயார் செய்த எலுமிச்சைச் சாறு, நீர்மோர், லஸ்ஸி, பழச்சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்துப் பருகலாம். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக நீர்ச் சத்து அதிகம் நிறைந்த பழ வகைகளான தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு பழம், திராட்சை, அன்னாசி, வெள்ளரி, கீரைகள் மற்றும் காய்கறிகளை உண்ணலாம்.

பள்ளியில் தேவையான ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மற்றும் முதலுதவி பெட்டகத்தினை தயார்நிலையில் வைத்திருத்தல் வேண்டும். மாணவர்கள் வெய்யிலில் செல்லும் போது குடையைப் பயன்படுத்திட அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்களுக்குத் தட்டம்மை (Measles), பொன்னுக்கு வீங்கி (Mumps) மற்றும் சளி, காய்ச்சல் இருந்தால் உடனே அருகிலுள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கோ. அல்லது அரசு மருத்துவமனைக்கோ சிகிச்சையினை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரூ 1.80 கோடி மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு.. பிரபல நகைக்கடையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details