தமிழ்நாடு

tamil nadu

சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படுவார்.. உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 3:47 PM IST

Santhan: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன், தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களான முருகன், சாந்தன் உள்ளிட்டோர் கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாததால், திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக, தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வில் இன்று (பிப்.13) விசாரணைக்கு வந்தது. அப்போது
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சாந்தனுக்கு இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை என்பதால், தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்.. பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details