தமிழ்நாடு

tamil nadu

சாந்தன் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 4:00 PM IST

Santhan: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று (மார்ச் 1) காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கல்லீரல் பிரச்சினை சம்பந்தமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.28ஆம் தேதி காலை 7.50 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சாந்தன் உடலை, அவரின் தாயகமான இலங்கைக்கு அனுப்பவும், அவரின் பயண ஆவணங்களை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சரிபார்த்து அனுப்பி வைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று இரவு (பிப்.29) சாந்தனின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு, மருத்துவமனையில் இருந்து இலங்கை கொண்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து சரக்கு விமானம் மூலம் உடலை இலங்கை கொண்டு செல்வதற்கான நடைமுறைகள் அனைத்தும் இன்று காலை செய்து முடிக்கப்பட்டு, இன்று (மார்ச் 1) காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், சாந்தனின் உடல் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் விமானம் கொழும்பு சென்றடைந்த பின்பு, அங்கு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி முகாமில் இருந்த சாந்தன், அண்மையில் தனது சொந்த நாடான இலங்கைக்கு தன்னை செல்வதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை துணை தூதர், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்பட பலருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

அதில் “கடந்த 32 வருடங்களாக எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்” எனக் கூறியிருந்த சாந்தன், இன்று தனது தாய் மண்ணிற்கு நிறைவேறாத ஆசைகளுடன் சடலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிவில் நீதிபதி தேர்ச்சி பட்டியல் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details