தமிழ்நாடு

tamil nadu

இலங்கையில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 4:57 PM IST

12 fishermen returned to Tamil Nadu: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த 12 மீனவர்களை, இலங்கை நீதிமன்றம் விடுவித்ததை அடுத்து, விமானம் மூலம் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

12 fishermen returned to Tamil Nadu
இலங்கையில் இருந்து தமிழகம் அழைத்துவரப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், கடந்த ஜனவரி 13-ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களையும் கைது செய்தனர். இதை அடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, அவர்களது உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மத்திய மாநில அரசு, இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, சிறையில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது.

இதன் பின்னர், விடுவிக்கப்பட்ட 12 மீனவர்களையும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர், அவர்கள் அனைவருக்கும் அவசரகால எமர்ஜென்சி சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகள், கொழும்பு விமான நிலையத்தில் இருந்து மீனவர்களை விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக மீனவர்கள் பிரிவுத் தலைவர் முனுசாமி தலைமையிலான பாஜகவினர், இலங்கையில் இருந்து மீட்கப்பட்ட 12 மீனவர்களுக்கும் சால்வை அணிவித்து, அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கி வரவேற்றனர்.

இதனை அடுத்து, மீனவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, மீன்வளத்துறை அதிகாரிகள் தனி வாகனம் மூலம் அனைவரையும் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸை கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது!

ABOUT THE AUTHOR

...view details