தமிழ்நாடு

tamil nadu

விசிக பொதுச் செயலாளராக தேர்தல் ஆலோசகர் ஆதவ் அர்ஜூனா நியமனம்! பொதுத் தொகுதியில் போட்டியா? பின்னணி என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 10:25 PM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்புக்கு ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக திருமாவளவன் அறிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை : விடுதலை சிறுத்தை கட்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் நவீனத்துவ மாற்றங்களுக்கு பின்னணி நபராக அறியப்பட்ட பிரபல தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்கிற முக்கிய பொறுப்பிற்கு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் திருமாவளவன்.

சமீப காலத்தில் விசிகவில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் நியமனம், பூத் கமிட்டி கூட்டம் தொடங்கி, அண்மையில் திருச்சி சிறுகனூரில், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட விசிகவின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு வரை, கடந்த ஓராண்டில் விசிகவில் நிகழ்ந்து வரும் தலைகீழ் மாற்றங்களுக்கும், திருமாவளவனுக்கு பக்கபலமாகவும் செயல்பட்டு வருபவர்தான் Voice Of Commons நிறுவனத்தின் தலைவர் ஆதவ் ஆர்ஜுனா.

திமுகவுக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த ஆதவ் அர்ஜுனாவை விசிகவின் பக்கம் திருமாவளவன் அழைத்து வந்ததே கட்சியை பலப்படுத்தவும், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கியுமே என்று விசிகவில் ஒரு பேச்சு இருந்து வந்தது. திருமாவளனின் இந்த எண்ணத்தை நன்கு உணர்ந்தவரான ஆதவ் ஆர்ஜுனா, திருச்சியில் நடந்த மாநாட்டில், விசிகவின் அடிப்படை உறுப்பினராக தம்மை இணைத்தும் கொண்டார்.

கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஆதவ் அர்ஜுனாவின் திறமைகள் குறித்து திருமாவளவன் பல தருணங்களில் வெளிப்படையாகவே பேசியதாக கூறப்படுகிறது. கட்சியின் வளர்ச்சிக்கு துடிப்பாக செயல்படக்கூடிய வகையில் இளைஞராகவும், அரசியல் நுண்ணறிவு கொண்டவராகவும், தேர்தல் வியூக நிபுணராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவராகவும் உள்ள ஆதவ் அர்ஜூனாவை தனது கட்சியின் செயல்பாடுகளில் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டார்.

அதன் அடையாளமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பான துணை பொதுச் செயலாளர் பதவியை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளையாவது திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் உறுதியாக உள்ளது.

இம்மூன்று தொகுதிகளில் 2 தனித் தொகுதிகளுடன் ஒரு பொதுத் தொகுதியும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் விசிக, திமுகவிடம் உறுதியாக எடுத்துரைத்துள்ளது. பொதுத் தொகுதியாக பெரம்பலுார் அல்லது கள்ளக்குறிச்சி இரண்டில் ஒன்றை கண்டிப்பாக பெறும் முடிவில் விசிக உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பொதுத் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை வேட்பாளராக களமிறக்க விசிக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் கடந்த ஓராண்டாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து பயணித்து வருவதால் கட்சியினர் மத்தியிலும் அவருக்கு நன்மதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவுடனும் ஏற்கனவே இணைந்து பணியாற்றியவர் என்பதால், திமுக தரப்பும் அவருக்கு ஆதரவாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே பொதுத் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை களம் இறக்கினால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என திருமாவளவன் கணக்கு போட்டு உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் விசிகவின் சார்பில் பொதுத் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை களமிறக்கி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க ஆயத்தமாகி வருகிறது ஒட்டுமொத்த விசிக முகாம். அதற்கு முன்னோட்டமாக கட்சியின் முக்கிய பதவியான துணைப்பொதுச்செயலாளர் பதவியை வழங்கி அழகுபார்த்துள்ளது விசிக தலைமை.

இதையும் படிங்க : "எங்களோட சேர்ந்து குரல் கொடுங்க" எடப்பாடிக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details