தமிழ்நாடு

tamil nadu

தாளவாடி அருகே கர்ப்பிணி பெண் உயிரிழப்பில் மர்மம்: கணவர் தலைமறைவு.. கோட்டாட்சியர்விசாரணை! - Erode Pregnant Woman Death

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 10:34 AM IST

Erode Pregnant Woman Death: தாளவாடி அருகே கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் அடித்துக் கொன்றதாக பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Erode Pregnant Woman Death
ஈரோடு கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண்ணின் உறவினர்கள் நேற்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து, தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(28), கூலி தொழில் செய்துவரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆஷா(23) என்பவருக்கும், கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆஷா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கணவர் ரமேஷ் மது அருந்திவிட்டு ஆஷாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவர் மனைவிடையே ஏற்பட்ட தகராறில், ரமேஷ் மதுபோதையில் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ரமேஷ் வெளியில் சென்றுள்ளார். இதற்கிடையே, நீண்ட நேரம் ஆகியும் ஆஷா வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே ஆஷா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைனைடுத்து, அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து, தாளவாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் தாளவாடி போலீசார், சந்தேகம் மரணம் என வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ரமேஷை வலைவீசித் தேடிவருகின்றனர். இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொன்றதாக, கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண்ணின் உறவினர்கள், தாளவாடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இச்சம்பவம் குறித்து கணவர் ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர், இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தைதை கைவிட்டு சென்றனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆனாதால் வருவாய் கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்நிலையில், தொட்டகாஜனூர் கிராமத்தில் 24 மணி நேரமும் கர்நாடகா மது எளிதாக கிடைப்பதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்குக் கூட செல்லாமல் குடிபோதையில் சுற்றிவருவதாகவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கல்லூரி மாணவிகளுக்குத் தவறான பாதை.. நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு.. வழக்கு கடந்து வந்த பாதை! - Nirmala Devi

ABOUT THE AUTHOR

...view details