தமிழ்நாடு

tamil nadu

காதல் விவகாரம்; அக்கா, காதலனை வெட்டிக் கொலை செய்த தம்பி..! மதுரை அருகே பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 11:19 AM IST

மதுரை அருகே வேற்று சமூக இளைஞரைக் காதலித்ததால் அக்கா மற்றும் காதலனை வெட்டிக் கொலை செய்து விட்டுத் தலைமறைவான இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Police arrested a youth who hacked his sister and her lover to death near Madurai
மதுரை அருகே இரட்டைக் கொலை

மதுரை: திருமங்கலம் அடுத்த கூடக்கோவில் காவல் சரகத்துக்கு உட்பட்ட கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நந்தி பெருமாள் என்பவரின் மகன் சதீஷ்குமார் (28). கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை பார்த்து வந்து இவர், அதே ஊரைச் சேர்ந்த அழகுமலை என்பவரின் மகள் மகாலட்சுமியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மகாலட்சுமியின் பெற்றோர்கள் அவருக்கு கடந்த 3 ஆண்டுகள் முன்னர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மகாலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனிடையே, தனது முன்னாள் காதலரான சதீஷ்குமார் உடனான நட்பை மகாலட்சுமி மீண்டும் ஏற்படுத்திக் கொண்டதாகவும், இருவரும் மீண்டும் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விவரம் அறிந்த மகாலட்சுமியின் சகோதரர் பிரவீன்குமார் (20) என்பவர் இருவரையும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜனவரி 30ஆம் தேதி இரவு வேலை முடித்து கொம்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு சதீஷ்குமார் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த பிரவீன்குமார், சதீஷின் கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவி, அரிவாளால் கொடூரமாகத் தாக்கியதில் சதீஷின் தலை துண்டானது. துண்டான தலையை அக்கிராமத்தில் உள்ள நாடக மேடையில் வைத்துவிட்டு பிரவீன்குமார் அங்கிருந்து சென்றுள்ளார்.

மேலும், ஆத்திரம் தீராத பிரவீன்குமார் வீட்டிற்குச் சென்று, அவரது சகோதரி மகாலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதை தடுக்க வந்த தாய் சின்னப்பிடாரியின் கையையும் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து, இந்த கோரச் சம்பவம் குறித்து சதீஷ்குமாரின் சகோதரர் முத்துக்குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரவீன் குமார் வெட்டியதில் கை துண்டான சின்னப்பிடாரியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் சரக டிஎஸ்பி வசந்தகுமார் கொலை சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பிரவீன்குமாரை பிடிக்க 2 தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இரு கொலை செய்துவிட்டு தலைமறைமான பிரவீன்குமாரை தீவிரமாக தேடி தனிப்படை போலீசார் நேற்று (ஜன.31) கைது செய்தனர்.

கொலை செய்தவரும், கொலை செய்யப்பட்டவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க கொம்பாடி கிராமத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'முதலும் நீ முடிவும் நீ' - காதலியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட இளைஞர் சடலமாக மீட்பு! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details