தமிழ்நாடு

tamil nadu

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்: விவசாயிகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததால் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 6:01 PM IST

Parandur Airport: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரில் பேரணியாகச் சென்ற விவசாயிகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

police arrest who were protesting against parandur airport
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்: விவசாயிகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு

காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதற்காக காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ஆகையால் நிலம் எடுப்பது குறித்து, நிலத்தின் உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபணைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் எனவும், தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், பரந்தூர், காஞ்சிபுரம் என்ற எழுத்து முகவரியில் எழுத்து மூலமாகவும் பொதுமக்கள் தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம் எனவும், ஆட்சேபணைகள் மீது வரும் ஏப்ரல் 4ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகாம்பரம் கிராமத்திலிருந்து பொன்னேரி கரைப் பகுதியில் அமைந்துள்ள நில எடுப்பு அலுவலகம் வரை டிராக்டரில் பேரணியாகச் சென்று, அலுவலகத்தை முற்றுகையிட்டுக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதற்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், அனுமதி மறுக்கப்பட்டதை மீறிச் சென்றாலும், சில கிலோ மீட்டர் டிராக்டரில் சென்ற பிறகு கைது செய்யப்படுவீர்கள் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை போராட்டம் துவங்குவதற்கு முன்பே, காவலர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பொதுமக்களையும், விவசாய டிராக்டரில் போராட்டத்திற்குச் செல்லக் கிளம்பிய விவசாயிகள், பெண்கள் என அனைவரையும் போலீசார் கைது செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, நாங்கள் போராட்டத்தைத் துவங்குவதற்கு முன்பே எங்கள் கிராமங்களில் அத்துமீறி கைது செய்வது காவல்துறையின் அராஜகப் போக்கு என விவசாயிகள் மற்றும் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசாரும் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாகத் தரதரவென இழுத்துச் சென்று, பேருந்துகளிலும் காவல்துறை வாகனங்களிலும் ஏற்றி கைது செய்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

சுமார், 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்திற்கு அனுமதி தராத காவல்துறையினரை எதிர்த்து, கைதான அனைவரும் இன்று உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். போராட்டத்தை முன்னிட்டு சுமார் 500க்கும் மேற்பட்ட நான்கு மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சென்னை மெரினாவில் இன்று மாலை திறக்கப்படும் 'கலைஞர் நினைவிடம்' - சிறப்பம்சங்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details