தமிழ்நாடு

tamil nadu

"மேகதாது, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரசு முதலில் தீர்வு காண்க" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 5:58 PM IST

Updated : Jan 28, 2024, 6:28 PM IST

PMK Anbumani ramadoss: கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் கேரளாவில் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

PMK Anbumani ramadoss
அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

மதுரை: மதுரையில் நடைபெறும் 72வது நாடார் மகாஜன சங்க மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்ற பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "சமீபத்தில் தமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் நிலவி வருகிறது.

காவிரி குறுக்கே மேகதாதையும், முல்லைப் பெரியாறு அணையில் அதற்கு நிகராக புதிய அணையை கட்டுவோம் என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டிக்கத்தக்கது. இப்போது இருக்கும் அணை வலிமையாக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட குழு ஐந்து முறை உறுதி அளித்துள்ளது.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது என்பதை பார்க்கும்போது வேண்டுமென்றே கர்நாடகா அரசு தமிழகத்திடம் மோதி கொண்டிருக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் விரைந்து உரிய தீர்வு காண வேண்டும். அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என தேர்தல் வாக்குதியில் அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பின்பு இப்போது வரை மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், ஒரு சின்ன நடவடிக்கை கூட எடுக்கவில்லை.

ஜாதி வாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, மற்ற மாநிலங்கள் அதனை நடைமுறைப்படுத்தி நலத்திட்டங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாடு அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கலாம். காரணம், ஒரு பக்கம் மது, மற்றொரு பக்கம் கஞ்சா. கடந்த மூன்று ஆண்டு காலமாக போதை பொருள் பயன்பாடு 100 மடங்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் என்ன கிடைக்கிறதோ, அத்தனை போதை பொருளும் தமிழ்நாட்டில் சரளமாக கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் கஞ்சா போதைப்பொருளின் தலைநகரமாக இயங்கிவருகிறது திருவண்ணாமலை மாவட்டம். அங்கே எங்கு பார்த்தாலும் கஞ்சா. அங்கிருக்கும் அமைச்சர் எ.வ.வேலு அதை கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் கஞ்சா போதையினால் எல்லா பகுதிகளிலும் வழப்பறி, கொலை சம்பவம் நடக்கிறது. முதலமைச்சர் அதில் கவனம் செலுத்த வேண்டும். திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து கெடுத்து தலைமுறையை நாசப்படுத்தி விட்டார்கள். மருந்தகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்தில்தான் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த காலத்தில் 20 லட்சம் கோடி 30 லட்சம் கோடி என்று வாய்க்கு வந்தபடி பேசினார்கள். ஆனால், அதைப்பார்த்தால் ஒன்றுமே இல்லை. 1,700 ஏக்கரில் ஆரணி ஆற்றில் கொண்டு வரப்படும் 4ஜி சிட்டி என்ற திட்டத்தை மதுரையில் கொண்டு வாருங்கள். ஏன் எல்லா திட்டத்தையும் சென்னையில் கொண்டு வருகிறீர்கள். சென்னையில் இடமில்லை, 65% தொழிற்சாலைகள் உள்ளன. தென் மாவட்டங்களில் 12 சதவீதம் தான் தொழிற்சாலைகள் உள்ளது.

சென்னையில் இன்னும் நான்கு மாதத்தில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவர்களிடம் திட்டமிடல் தெரியவில்லை. வெள்ளம் வருகிறதா 6000 கொடுத்து விடுவோம், அதிலும் 2000 கமிஷன். ஆண்டாண்டு காலமாக இந்த இரண்டு கட்சிகளும் இதை தான் செய்து வருகிறது" என்றார்.

தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "அவர்கள் கண்ணோட்டத்தில் சொல்கிறார்கள். அது ஒரு கோயில் விழாவாகத்தான் பார்க்க வேண்டும்" என்றார். அதிமுக - திமுகக்கு மாற்றாக பாமக மூன்றாவது அணி அமைக்குமா என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "இந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து எங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். இவ்வளவு நாள் பொறுத்துக்கிட்டீங்க இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரது கூட்டணியில் இணைவீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "இன்னும் கல்யாணமே ஆகவில்லை, அதுக்குள்ள குழந்தைக்கு பேர் வைக்க சொல்கிறீர்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் அரசியலுக்கு வந்து நல்லது செய்யுங்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை போலீஸ்!

Last Updated : Jan 28, 2024, 6:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details