தமிழ்நாடு

tamil nadu

ஹைட்ரஜன் படகு தொடக்கம்; தமிழ்நாடு - காசி இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் - பிரதமர் மோடி பேச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 3:30 PM IST

PM Narendra Modi Visit Tuticorin: தூத்துக்குடியில் கலந்து கொண்ட நிகழ்வில், பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்தில், வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிக மகத்துவம் வாய்ந்தது எனவும், கோரிக்கையாக இருந்தவை தற்போது நலத்திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

PM Narendra Modi Visit Tuticorin
பிரதமர் மோடி

தூத்துக்குடி:தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாடு தூத்துக்குடியிலேயே வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. பல திட்டங்கள் தொடங்கப்படுகின்றன அல்லது அடிக்கல் நாட்டு விழாவைக் கொண்டாடுகின்றன.

இந்த திட்டங்கள்தான் முன்னேற்றமடைந்த இந்திய வரைபடத்தின் முக்கியமான ஒரு பகுதியாகும். இவை அனைவரின் முன்னேற்றம், அனைவரின் எழுச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்பதற்கான எடுத்துக்காட்டும் கூட. இந்த முன்னேற்றங்களில் உன்னத பாரதத்தின் உணர்வை நம்மால் காண முடிகிறது.

இந்த திட்டங்கள் வேண்டுமானால் தூத்துக்குடியிலே இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். இந்த தேசம், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்தில், வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிக மகத்துவம் வாய்ந்தது.

இரு ஆண்டுகளுக்கு முன், கோயம்புத்தூர் வந்திருந்தபோது சிதம்பரனார் துறைமுகம் சரக்குகளைக் கையாளும் திறனை அதிகரிக்கும் பொருட்டு, பல திட்டங்களைத் தொடக்கி வைத்திருந்தேன். வ.உ.சி துறைமுகத்தைக் கப்பல் போக்குவரத்தின் ஒரு பெரிய துறைமுக மையமாக மாற்றியே தீருவேன் என அப்போதே கூறி வாக்களித்துச் சென்றேன்.

தற்போது இன்று நிறைவேறி இருக்கிறது. துறைமுகத்திற்கு வெளியேயான சரக்கு கப்பல் முனையத்திற்காக வெகு காலமாகக் காத்திருக்கிறது. இன்று அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இந்த ஒரு திட்டம் மட்டும் 7 ஆயிரம் கோடி அளவில் முதலீடு செய்யப்பட இருக்கிறது.

ரூ.900 கோடி மதிப்பில் பல திட்டங்களும் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றைத் தவிர, இன்று பல துறைமுகங்களில் கிட்டத்தட்ட 2,500 ரூபாய் கோடி பெறுமானமுள்ள 13 புதிய திட்டங்களும் இங்கே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. கடல் வாணிபத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இந்த புத்துயிர் மற்றும் புது தெம்பு காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கானோருக்கு ஆதாயம் கிடைக்கும். இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு வேலைக்கான புதிய சந்தர்ப்பம் உருவாகும்.

இங்கே இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்ற நலத்திட்டங்கள் வெறும் கோரிக்கைகளாக மட்டுமே இருந்து வந்தன. இவை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தன. ஆனால், இன்று உங்களுடைய பிரதம சேவகனாக நான் இங்கு உங்களுடைய விருப்பங்களை, கனவுகளை நிறைவேற்ற வந்திருக்கிறேன்.

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் மக்கள் படகு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. காசியின் கங்கையாற்றின் மீதும், இந்த பயணப்படகு வெகு விரைவில் துவங்க இருக்கிறது. காசி தமிழ்ச் சங்கத்தில் உரையாற்றக்கூடிய நற்பெயர் எனக்குக் கிடைத்தது.

ஹைட்ரஜன் படகு காசியின் கங்கையாற்றில் பயணிக்கும் காலத்தில் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே இருக்கக்கூடிய நான் பார்த்து அனுபவித்த அந்த நல்ல உறவு, மேலும் ஆழப்பட இருக்கிறது. இது காசிவாசிகளுக்கும், தொகுதிவாசிகளுக்கும் தமிழ்நாடு மக்கள் அளிக்கும் நன்கொடையாகும்.

வ.உ.சி துறைமுகத்தில் உவரி நீரைக் குடிநீராக மாற்றும் ஆலை, பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடியும் சரி, தமிழ்நாடும் சரி பசுமையாற்றல் மற்றும் நீடித்த மையமாக மாறும். பாதுகாப்பிற்கான எதிர்காலத்திற்கான எந்த மாற்றுகளின் திசையை நோக்கி, உலகம் பார்க்கிறதோ அவற்றில் தமிழ்நாடு மிகவும் முன்னேறிய நிலையில் பயணிக்கும்" என்று பேசினார்.

இதையும் படிங்க:சொந்த தொகுதியில் கனிமொழி பெயரை கூறாமல் கடந்த பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details